October 19, 2020

பவா செல்லதுரைக்கு கடிதம்

அன்புள்ள பவா,


நான் கிஷோர் குமார், திருச்சியில் வசிக்கும் கல்லூரி மாணவன். பல மாதங்களாக எழுத நினைத்துத் தயங்கி, இன்று ஏதோ ஒரு உந்துதலில் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.

October 17, 2020

வெள்ளையானை - ஜெயமோகன் - கடிதம்

 அன்புள்ள ஜெயமோகன்,


வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான்...

September 15, 2020

மனப்பிறழ்வும் கலையும் - சாரு நிவேதிதா - கடிதம்

 அன்புள்ள சாரு,

உங்கள் 'கோபி கிருஷ்ணன் உரை'யில் பங்கேற்றேன். இதுதான் நான் பங்கேற்கும் முதல் கூட்டம். 
மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பேராசிரியரைப் போல் வார்த்தை வார்த்தையாக விளக்கினீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியம் மீதுள்ள passion அவ்வுரையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது.
(பொதுவாகப் பேராசிரியர்களிடம் உள்ள குறை என்பது இந்த passion இல்லாமைதான்.)

இளிப்பியல் - ஜெயமோகன் - கடிதம்

 அன்புள்ள ஜெயமோகன்,

'இளிப்பியல்' வாசித்தேன். நான் சமூக ஊடகங்களில் activeவாக இருப்பவன் அல்ல. அது எனக்கு ஒரு ஒவ்வாமையையே அளிக்கிறது. நண்பர்கள் "ஏன்?" என்று கேட்கும் போது "ஆர்வமில்லை" என்று மட்டும் சொல்லிவிடுவேன். ஆனால், ஏன் அது ஒவ்வாமை அளிக்கிறது என்று எனக்குள் வினவி ஒருவாறு தொகுத்துக்கொண்டேன்.

August 13, 2020

விமர்சன காணொளிகள்

 'நான் பேச நினைப்பதெல்லாம்' என்னும் Youtube பக்கத்தில் வெளியாகி பரிசுப்பெற்ற என் காணொளிகள்.

1. கானல் நதி  - யுவன் சந்திரசேகர் 

https://youtu.be/7mWsS7NgzzE

2. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் 

https://youtu.be/0aISBj5wkBo

3. யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்

https://youtu.be/V3wpjTAaKT0

July 16, 2020

நவீன ஓவியங்கள் - சி.மோகன்


An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன்.
---------------------

வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று மழைப்பாடல் வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசகர்கள் அனைவரும் பாண்டவர்களின் மறைவுக்கு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நான் பாண்டுவின் மரணத்திற்கு கண்ணீர் விடுகிறேன்.

தவளைகளின் இறைஞ்சல் போல என் மனம் முழுக்க நாவலின் பல்வேறு  தருணங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

உண்மையாகவே இந்நாவல் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்று அப்படியே சிதறடித்து விட்டது. எவ்வளவு வாழ்க்கைகள், நிகழ்வுகள், உச்சங்கள், சரிவுகள், பிறப்புகள், இறப்புகள், நிலகாட்சிகள். 

பாத்திர படைப்புகளை கருப்பு வெள்ளை என்று பகுக்காமல் சாம்பல் பகுதியின் வெவ்வேறு அழுத்தங்களில் உள்ளதால் அனைத்தையும் மிக நெருக்கமாக உணரமுடிகிறது.

பாலைநில போர்வீரன் சகுனி தன் தமக்கைகாக நெகிழும் போதும் பீஷ்மரை கட்டிப்பிடித்து கண்ணீர் விடும் போதும் அப்பாலை நிலத்தில் ஊரும் ஒற்றை கிணற்றை கண்டேன்.

குந்தியின் அறிமுக காட்சியே அபாரம். யாதவ பெண்ணிலிருந்து அரசியாக, கணவனுக்கு தாயாக, மதியூகியாக அவளின் பாத்திரப்படைப்பு பிரம்மிக்க வைக்கிறது.
அவள் தன் இடம் உணர்ந்து அதை தக்கவைத்து கொள்ளவே முதலில் விழைகிறாள். ஆனால், எதிர்பாராமல் தேவயானியின் மணிமுடி சூடி அமர்கையில் அதிகாரத்தின் ருசி அறிகிறாள். அத்தருணத்தை வகுத்த ஊழினை வாழ்த்துவோம்!

திருதிராஷ்டிரன் மூர்க்கமும் அன்பும் ததும்பும் ஒரு குழந்தையாகவே உள்ளான். தம்பிகளிடம் நெகிழ்வு, இசையுடன் அவனது நெருக்கம் , தீர்கசயாமருடனான உறவு, பிறந்த மைந்தனுக்கு கண் உள்ளதா என்று அவன் கேட்பது என அனைத்தும் அவன் கதாபாத்திரத்தின் அனைத்து கோணங்களையும் காட்டுகிறது.

குழந்தை பிறப்புகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக துரியோதனன் பிறப்பும், அதற்கு முன்பாக சகுனியுடன் பகடையாடும் கலியின் உருவம் வரும் காட்சிகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியவை.

அர்ஜுனன் பிறப்பது ஒரு மாபெரும் கனவு. உங்கள் அனைத்து பயணங்களும் அனுபவங்களும் வெண்முரசு எழுத்துவதற்காகவே ஊழால் விதிக்கப்பட்டன போலும்.

விதுரன், சகுனி, குந்தி, சத்யவதி போன்ற மதியூகிகள் ஆடும் அரசியல் விளையாட்டை விட பாண்டுவின் திருதிராஷ்டிரனின் அம்பிகையின் நெகிழ்வு தருணங்களே மனதிற்கு நெருக்கமாக உள்ளது. அனைத்து அறிவுகளுக்கு மேல் அந்த உணர்ச்சி மட்டும் நேரடியாக அகத்தின் ஆழத்தை தொடுகிறது. அல்லது நான் அப்படி கற்பித்து கொள்கிறேனா?

கங்கையின் ஆழத்தில் ஊரும் மண்மகள் சீதையின் கண்ணீர், ஆறுமுகனை வழிபடும் பாண்டு போன்ற புராணங்கள் தக்க இடத்தில் அமைவதனால் அதன் அழுத்தம் கூடுகிறது. எவ்வளவு பெரிய படிம களஞ்சியத்திருக்கு நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு தான் ஏற்பட்டது.

காலம் ஒரு பெரிய சுழியாக நிகழ்ந்த வற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கிறது. இந்நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்திற்கும் தத்தம் சாயலில் ஒரு புராண கதாபாத்திரம் உள்ளது. ஒரு சூத கதை உள்ளது. ஆனாலும் மீள மீள நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.நூறாண்டு காணாத பெரு மழை பெய்து
மாபெரும் வெள்ளம் வந்து நகரை மூழ்கடிக்க ஆரம்பித்த நாவலின் அரசியல் ஆட்டம் அந்நகரம் தகிக்கும் கோடையில் வாட பாண்டுவின் மரணத்தில் முடிகிறது. ஆம் களத்தில் சில காய்கள் நீக்கப்ப்டுகின்றன. புதிய காய்கள் விரைவில் அவ்விடத்தை பிடித்துக்கொள்ளும். தவளைகள் இந்திரனிடமும் வருணனிடமும் இறைஞ்சுவது மழைக்காக மட்டுமல்ல!

தங்கள்
கிஷோர் குமார்.

June 10, 2020

உறை குருதி

 உறை குருதி

சுடுகாட்டு சாம்பல் மேட்டின் மேல் மெல்ல ஊர்ந்தது ஓர் நச்சரவம்.

பத்தி விரித்து சூழ நோக்கி பிளநா நீட்டி காற்றில் ஹிஸ்ஸிட்டு நீளுடல் சுருட்டி அமைந்தது.

அணைந்த சிதைக்குள் உறையும் கதுப்பில்  உடல் வெம்மை கூட்டியது.

ஏனெனில் அரவங்கள் கோல்டு-ப்லடட்.

வெதுப்பில் கண் சொக்க ஓர் அசைவை உணர்ந்தது.

சாம்பல் புகை சுற்றி படர எழுந்தமர்ந்தது ஓர் உடல்.

தன் சிறுமணி மூளைக்குள் உயிர்வாழ்திரவம் சுரக்க அவ்வுடலின் கழுத்து நாகத்தை சுருண்டு இறுக்கியது நச்சரவம்.

கை நாகங்களும் கால் நாகங்களும் மேல், கீழ், கிடை என அளைந்தடங்கியது. 

உடல் இறுக்கம் தளர தன் இறுக்கம் தளர்த்தி சுற்றி விழியொட்டியது.

அனைத்து சிதை மேலும் உடல் தூக்கி பார்த்து மீண்டும் படுத்தன நிழலிருள் உருவங்கள். 

நாம் மட்டும் கோல்டு-ப்லடட் இல்லை போலும் என தன் உடல் சுருட்டி நிலை மீண்டு வெதுவெதுப்பான இரத்த ஊறலை கேட்டது.

***

May 21, 2020

வெண்முரசு - களிற்றியானை நிரை : சிறு குறிப்பு

களிற்றியானை நிரை : தொல்நகரின் எழுச்சி.

வெண்முரசு நாவல் வரிசையில் 24 ஆவது நாவலான களிற்றியானை நிரை அஸ்தினபுரியின் எழுச்சியை காட்டுகிறது. 
ஆதன் என்ற தென்குமரி நிலத்தவன் 'அஸ்தினபுரி' என்ற சொல்லின் ஆணையால் தன்னகர் நீங்கி செல்கிறான். அவன் மட்டும் அல்ல அனைத்து திசைகளிலும் அஸ்தினபுரி மக்களை அழைக்கிறது. அஸ்தினபுரியின் தொல்குடிகள் நகர் நீங்குகிறது. ஆள் அரவமே இல்லாத நிலையில் அனைத்து நீர்க்கடன்களையும் முடித்து யுதிஷ்டிரன் நகர் புகுகிறார். 
சம்வகை, சுரேசர், யுயுத்சு சேர்ந்து நகரை மீட்கிறார்கள். 

உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்: சிறு குறிப்பு.

உறுபசி - கல்பொருசிறுநுரை 


சம்பதின் மறைவிற்கு பிறகு அவனது நண்பர்கள் வழியே சிதறிய நினைவுகளாக அவனது வாழ்வு சொல்லப்படுகிறது. 

அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி, ஜெயந்தி இவர்கள் ஐவரும் கண்ட சம்பத் தன்னை ஒரே நேரத்தில் ஈர்க்கவும், விலக்கவும், வெறுக்கவும் செய்பவனாக உள்ளான். செடிகளை விற்க மறுப்பவன், தீப்பெட்டி தீக்குச்சிகளை விரும்புபவன், சதா சிந்தனை செய்பவன் போன்ற வித்யாசமான குணங்களை கொண்டவன். 
தன்னை ஒரு கள்ளிச்செடி என்றும் அணைப்பவர்களை காயப்படுத்துவேன் என்றும் நினைக்கிறான். 
பலகோடி நட்சத்திரங்கள் இருக்கும் வானில் ஒரு எரிக்கல் போல் பிரகாசமாக ஒளிர்ந்து அணைகிறான். தீக்குச்சி போல் எரிந்து முடிகிறான். கல்பொருசிறுநுரை போல் பொங்கி அமிழ்கிறான்.