பவா செல்லதுரைக்கு கடிதம்
அன்புள்ள பவா,
நான் கிஷோர் குமார், திருச்சியில் வசிக்கும் கல்லூரி மாணவன். பல மாதங்களாக எழுத நினைத்துத் தயங்கி, இன்று ஏதோ ஒரு உந்துதலில் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்.
உங்களுக்கு ஒரு ஆயிரம் நன்றிகள் கூறி இக்கடிதத்தைத் தொடங்க விரும்புகிறேன். 2 ஆண்டிற்கு முன்பு புத்தகங்கள் வாசிக்கும் விருப்பம் ஏற்பட, இணையதளங்களில் தேடி அலைந்த பொழுது தான் தங்களை youtubeல் கண்டடைந்தேன். உங்கள் பெயரே எனக்கு முதலில் தயக்கத்தை உண்டு பண்ணியது , "என்ன பேர் இது?!" என்று முதலில் தவிர்த்து வந்த நான் பின்னர் உங்கள் பெரும் ரசிகனாக மாறினேன். உங்கள் சொற்கள் காட்சிகளாகக் கனவுகளையும், கண்ணீராகக் கண்களையும், அன்பால் நெஞ்சத்தையும் நிறைத்தது. நன்றிகள் அதற்காக மட்டுமல்ல, இன்று நான் என்னை ஒரு வாசகனாகவே அறிமுகம் செய்வேன். நீங்கள் கூறிய ' ஊமைச்செந்நாய்' கதை வழியே நான் ஜெயமோகனை சென்றடைந்தேன். அவரது எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி சொற்களால் விளக்குவது என்று தெரியவில்லை. வில்லின் நாணைப் போல் அவர் என்னுள் எதனையோ சுண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது தளம் இன்றைய சலிப்பும் வெறுப்பும் நிரம்பிய சமூகத்தில் ஒரு குளிர் நீர்ச்சுனை போல், ஒரு காட்டாற்றினை போல் நம்பிக்கையை விதைத்துச் செல்கிறது. இன்று நான் அவரோடு கடித தொடர்பில் இருக்கிறேன். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், தாங்கள், ஷோபா சக்தி, அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் என் அலமாரியையும், என் மனதினையும் நிறைத்ததற்கு தாங்களும் ஒரு காரணம். ஒன்றரை ஆண்டுகளில் நான் கடந்து வந்த பாதை என் முகத்தில் பெருமித புன்னகையை வரவழைக்கின்றது. அதை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
'இலக்கியம் சோம்பேறிகளின் வேலை' என்ற மிகப்பெரிய பொய்யினை, இலக்கியப் படைப்புகளையும், படைப்பாளிகளின் வாழ்வையும் வாசிக்க வாசிக்க நான் உணர்ந்தேன். எவ்வளவு லட்சிய தாகத்தோடு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுரங்கம் வெட்டுபவனைப் போல் ஆழ்பிரஞ்கையிலிருந்து சொற்களை வெட்டி எடுக்கும் எழுத்தாளனை விட ஒரு இலட்சிய பிறவியைக் காண இயலுமா?
எவ்வளவு அனுபவங்கள் ஒரு மனிதனுக்கு! உங்கள் '19.D.M. சாரோனிலிருந்து' மற்றும் 'எல்லா நாளும் கார்த்திகை' ஆகிய நூல்களை வாசித்துள்ளேன். அதன் அதிக்கவித்துவம் முதலில் செயற்கையாகப் பட்டது, பின்னர் நான் நிற்கும் உலகியல் தளம் வேறு நீங்கள் நிற்கும் மனிதம் தழும்பும் நிலம்(தளம்) வேறு என்பதை உணர்ந்தேன்.
( மரங்களாக மாறாவிட்டால், கிளிகளைப் பிடிக்க முடியாது. -கோணங்கி)
வீட்டை விட்டு வெளியே செல்லாத நான் சென்ற மாதம் தனியனாய் திருச்சியிலிருந்து நாகர்கோவில் வரை unreservedல் பயணம் செய்து திருவட்டாரு ஆலயம் சென்று வந்தேன். ஆம் இலக்கியம் மனிதனைத் தேங்க விடாது செல்!செல்! என்று உந்திக்கொண்டே இருக்கும்.
கடிதம் எங்கெங்கோ சென்று விட்டது. நன்றிகள் கூறி நிறைவு செய்கிறேன்..
தங்கள்,
கிஷோர் குமார்.
8-3-2020
Comments
Post a Comment