லாசர் : மரணமும் மீட்சியும்
லாசர் : மரணமும் மீட்சியும்
பள்ளி வாழ்க்கை முழுக்க வெவ்வேறு கிறித்தவ கல்வி நிறுவனங்களில் பயின்றதால், கிறித்தவம் சார்ந்த தொன்மங்களையும் விவிலிய கதைகளையும் ஓரளவுக்கு நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன்.
துயரில் கனிந்து சரிந்த விழிகளும், அருள் புரியலாமா வேண்டாமா என்பது போல் பாதி விரிந்த விரல்களும், தோளில் பரவிய அடர் பழுப்பு குழல்களுமாகக் காட்சி அளித்த தேவகுமாரனை என்றும் என் அணுக்கத்தில் உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் எழுதிய 'வெறும்முள்' , 'உயிர்த்தெழுதல்' போன்ற கதைகளும் பால் சக்கரியா எழுதிய சில கதைகளும் அவ்வணுக்கத்தை மேலும் நெருக்கமாக உணரவைத்துள்ளன.
இந்த லாசர் கதையில் வரும்
//திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.//
இவ்வரிகளை மிக நன்றாக உணர்ந்துள்ளேன். வாசித்தவுடன் அந்நாட்கள் அனைத்தும் நினைவில் ஓடி மறைந்தது.
லாசரை உயிர்த்தெழ வைத்ததே ஏசுவின் மகிமைகளில் உச்சமான ஒன்று. அப்படி ஒரு தொன்மத்தை, இடையான்குடியில் நடக்கும் ஒரு நிகழ்வோடு பிணைந்து கதையாக்கியுள்ள விதம் அபாரமானது.
இயல்பிலேயே வெகுளியாகவும் அசடாகவும் இருக்கும் லாசர், கண்டெடுப்பது ஒரு பை-கடிகாரம். காலத்தின் பருவடிவம். அவன் வீட்டில் சந்திப்பது அவனுடைய அன்பு தங்கையின் சாவு. காலரூபனாகிய மரணம்.
தங்கையுடன் சேர்ந்து அவனுடைய வெகுளித்தனமும் மரணிக்கிறது. அவன் ஒரு புது லாசராக உயிர்த்தெழுகிறான். அவனுக்கு நேர் எதிரான கதாபாத்திரமான ஜான்சனை இறுதியில் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் இருக்கும் அவனது நடத்தை அதையே காட்டுகிறது.
அவனது அகத்தில் இந்த மாற்றம் நிகழ்வது கால்டுவெல் முன்னிலையில் நடைபெறும் அந்த ஜெப கூட்டத்தில் தான்.
இதன் புற வடிவமாகவே இறுதியில் அவர் அந்த கடிகாரத்தை உயிர்ப்பிக்கிறார்.
காலத்தை கண்டடைதல் --> காலமின்மை --> புதிய காலம்... இதற்கு இணையாக மரணம் --> மரணத்தின் வெறுமை --> உயிர்த்தெழுதல் என லாசரின் வயதடைதலை(coming of age) இக்கதை காட்டுகிறது.
-----------
இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்தவை...
1. லாசரின் வெகுளித்தனத்தைக் காட்சிப்படுத்திய விதம். சொற்கள், சொற்களாகவே அவன் மனதில் ஓடுகின்றன. (திருச்செந்தூர்...திருச்செந்தூர், லாபம்... லாபம்,....) அதை தாண்டிய அர்த்தத்தை அவனால் பார்க்க முடியவில்லை.
2. மிகக்குறைவான சொற்களிலே கதாபாத்திரங்களை வலுவாக உருவாக்குதல். (தங்கை ஏசுவடியாள் , ஃபாதர் கால்டுவெல்...)
3. ஜெப கூட்ட சித்தரிப்பு. நான் வாசிக்கிறேனா அல்லது காதால் கேட்கிறேனா என்ற பிரமை எழுந்தது.
ஒட்டுமொத்தமாக, அற்புதமான வாசிப்பனுபவதை வழங்கிய அருமையான கதை...
---------
Comments
Post a Comment