Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

July 9, 2022

பேசாதவர்கள் - ஜெயமோகன் - வாசிப்பு குறிப்பு

பேசாதவர்கள் - ஜெயமோகன்

பேசாதவர்கள் கதையின் மையப் படிமம் அந்த மனிதச்சிறைக்கூண்டு -தூக்குபூட்டு- தான். இப்படியான கொடூர தண்டனைகள் கொடுக்க துளியும் குற்றவுணர்வற்ற சமூகங்களால் தான் இயலும். அவர்கள் எந்தவிதமான உணர்வுபூர்வ பிணைப்பும் இல்லாமல் ஒரு மேலான கடமையை ஆற்றுவதைப் போல் தான் அத்தண்டனைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.

May 21, 2020

விரியும் விதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது.

வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம்.

இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன?

இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான்.

அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அலைபேசி டவரில் தன் வீட்டை கட்டினாலும் கட்டும் போலும்!

“வாழ்வை சித்தரிப்பது அல்ல என் கதைகள், அவற்றின் அடிப்படையை ஆராய்வது” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அவை மனித வாழ்வையும் கடந்ததாக எனக்கு படுகிறது. உங்கள் கதைகள் எண்ண எண்ண விரியும் விதைகளாக உள்ளது.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

மலைகளின் உரையாடல் [சிறுகதை] - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

மலைகளின் உரையாடல் [சிறுகதை]

‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது.

ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது.

மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது.

அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை.

ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாமல் உள்ளதாக படுகிறது. விசும்பை போலவே கதை ஒரு பரந்த தரிசனத்தை கொடுத்தாலும், இதன் தலைப்பு ‘மலைகளுக்கு இடையேயான உரையாடலை’ மட்டும் குறிப்பிட்டு குறுகுகிறது.  மறுவாசிப்புகளில் அதன் பிடி கிடைக்கலாம்.

தங்கள்,

கிஷோர் குமார்.

திருச்சி.

ஜெயமோகன் சிறுகதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky  முதல் சுந்தரராமசாமி வரை.

ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது.

பிறகு, படிக்காமல் விட்ட மாயப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது. மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால்  உலகம் நோக்கி விரியும் கதை. இரண்டுமே அற்புதமானவை.

வாசித்து முடித்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருச்சி மிகவும் வெப்பமான மாவட்டம். அதில் இந்த கோடை மழை ஒரு வரப்பிரசாதம். வான் சிற்றலை. பால்கணியில் அமர்ந்து உங்கள் கதைகளை மழையில் அசை போடும் அருமையான அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.

தங்கள்

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்,

உண்மையில் ஒரு கதை இன்னொரு கதையை உருவாக்கும். இதை பெரும் படைப்பாளிகள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு கதைவழியாக ஓர் உயரத்திற்குச் சென்றபின் மேலும் மேலும் செல்லமுடியும். உலகின் சில ஆசிரியர்களின் மகத்தான கதைகள் ஓரிரு நாளில் தொடர்ந்து எழுதப்பட்டவை. குறிப்பாக பால்ஸாக் அப்படி நிறைய எழுதியிருக்கிறார். அது ஒரே வைரத்தை திருப்பித்திருப்பி முடிவில்லாது பார்த்துக்கொண்டிருப்பதுபோல

ஜெ

எழுகதிர் [சிறுகதை] - கடிதம்

எழுகதிர் [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

எழுகதிர் ஒரு மாபெரும் கேன்வாஸில் நிகழும் கதை.

கதாநாயகனின் நண்பன் வழியாக கதை சொல்லப்படுவதால் ஒரு சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது. ஸ்ரீ யின் பார்வையில் நிகழ்ந்தால் எத்தனை சாகசங்கள், எத்தனை ததள்ளிப்புகள், எத்தனை அழைகளைப்புகள். அது ஒரு நாவலின் களமாக விரிய கூடியது. ஸ்ரீ யின் பார்வையில் நினைக்கவே திகிலாக உள்ளது. {பின்தொடரும் நிழல் வீரபத்ரனை போல்!}

வாசிக்கும் போதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முற்படும் போது கதையில் ஒரு திருப்பம் வருகிறது. ஸ்ரீ இடம் உள்ள அருண பிந்துவை பறித்து கொள்கிறார்கள், அது வெறும் கூழாங்கல்லாக உள்ளது(அர்ஜுனன் எடுத்த அஸ்வத்தாமனின் நுதல் மணி போல்). ஸ்ரீ யே அம்மணியாக மாறி கிழக்கே சென்று கொண்டே இருக்கிறான்.

கதையின் முடிவு ஒரு உச்சம். அவன் மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்று சென்று கொண்டே இருக்கிறான்.கிழக்கே அருணனை நோக்கி! (ஏழு எட்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகார்த்தாவில் தென்படுகிறான். ஒருவேளை அது இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றாக இருக்குமோ??!!)

தங்கள்,

கிஷோர் குமார்.

ஏகம் [சிறுகதை] - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஏகம் [சிறுகதை]

ஏகம் ஒரு அழகான சிறுகதை. அதன் அளவு சிறியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது. காரில் திருமணத்திற்கு செல்லும் ஒரு சிறு எழுத்தாளர் கூட்டத்தின் உரையாடலிலிருந்து கதை தொடங்குகிறது. ஜே.கே மீது அவர்களுக்கு ஒரு aversion உள்ளது. ‘கருத்துநிலை கதைகள்’ என்று கோபாலன் சொல்கிறான்.

அவர்கள் வேறொரு உலகில் வாழ்கிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் மனநிலை, உரையாடல் ஆகியவற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.கே – திருமணம் – பெருமாள் என இவர்கள் உரையாடல் நீடிக்கிறது.

இவர்கள் தான் புல்லாங்குழல் வாசிக்கும் மணியை சற்று நேரத்தில் கவனிக்கிறார்கள். சுற்றி உள்ள பொன்வண்டுகளுக்கும் பட்டுவேட்டிகளுக்கும் அவ்விசை ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் ஜே.கே வந்த உடனே அந்த இசையை அடையாளம் காண்கிறார். யானையின் வழித்தடம் உருவாகி , அனலென அமர்கிறார். ‘கருத்துநிலை எழுத்தாளரும்’ புல்லாங்குழல் இசைஞனும் சந்தித்து, உரையாடி, விடைபெருவது ஒரு கவித்துவ நிகழ்வு.

அந்நிகழ்வு கூட சுற்றியுள்ள கூட்டத்திற்கு புரிய வில்லை. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்கள். வண்டிகளின் கிரீச்சிடல்கள். முட்டல்கள்,மோதல்கள். ஒலித்திரள். காட்சித்திரள்.

இவற்றின் நடுவே ஒருசொல் இன்றி சென்றுகொண்டிருந்தது அவர்கள்தான், அந்த ஐந்து பேர்.

தங்கள்,

கிஷோர் குமார்.