June 11, 2021

இயற்கையை அறிதல் - எமர்சன்

 எமர்சனின் இயற்கையை அறிதல்

(தமிழில்: ஜெயமோகன்)


பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு.  விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை.  ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று.

 - ஜெயமோகன் (மரபை கண்டடைதல்)


இயற்கையை அறிதல் புத்தகத்திலிருந்து சில வரிகள்:


நட்சத்திரங்கள் மட்டும் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இரவுக்கு மட்டும் தோன்றுமென்றால் மனிதர்கள் அதை எந்த அளவிற்கு விரும்பியிருப்பார்கள்?


அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் கண் உள்ளவனுக்கு மட்டும் உரிமையான ஒரு நிலம் தொடுவான் வரை உள்ளது.


சூரியன் மனிதர்களின் கண்களை மட்டுமே ஒளி பெறச் செய்கிறது. ஆனால் குழந்தையின் கண்ணையும் இதயத்தையும் அது சுடரால் நிரப்புகிறது.


இயற்கையை நேசிப்பவன் யார்? எவனுடைய வெளிப்புலன்களும் உட்புலன்களும் பரஸ்பரம் சரியாக பொருந்திப் போகின்றனவோ அவன்தான்.


இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாக பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம்.


இயற்கை, மனிதனின் சேவையில் கச்சாப்பொருள் மட்டுமல்ல; அதுவே உழைப்பும் அதுவே விளைவும் ஆகும்.


ஆரோக்கியமான விழிகள் தொடுவானத்தைக் கோருகின்றன.


புலரியே எனது அசரியா மாநகர், அஸ்தமனம் எனது பாப்போஸ் பேரரசு, நிலவுதயமே எனது கந்தர்வ லோகம், நண்பகல் எனக்கு விவேகமும் அறிவும் மிக்க இங்கிலாந்து, இரவு எனக்கு ஞானத் தத்துவமும் கனவுகளும் மண்டிய ஜெர்மனி.


ஒரு மேலான ஆன்மீக அம்சமொன்றின் அருகாமை அழகின் முழுமைக்கு அவசியமாக ஆகிறது.


மகத்தான செயல்பாடுகள் மூலம் இப்பிரபஞ்சம் அதில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான ஒன்று என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். பிரக்ஞை உள்ள எந்த ஒரு மனதிற்கும் முழு இயற்கையுமே சொத்தாகவும் சீதனமாகவும் உள்ளது. அவன் விரும்பினால் அது அவனுடையது. அவன் அதிலிருந்து தன்னைப் பிய்த்துக் கொள்ளலாம். தனது மணிமுடியை அவன் துறந்துவிடலாம். ஏதாவது மூலையில் ஒடுங்கிக்கொள்ளலாம். பெரும்பாலான மனிதர்கள் செய்வது அதைத்தான்.


மூடப்பட்ட இடங்களில், கீழ்மையான சூழல்களில், ஆற்றப்படும் உண்மையும் தீரமும் மிக்க ஒரு செயல் உடனடியாக வானத்தை தன் ஆலயமாகக் கொண்டுவிடுகிறது; சூரியனை தன் விளக்காகவும்.


அழகின் மீதான காதலே நுண்ணுணர்வு.


ஒரு தனித்த பொருள் பிரம்மாண்டத்தின் எழிலைக் குறிப்புணர்த்தும்போது மட்டும் தான் அழகாக இருக்கிறது.


கலை என்பது என்ன? மனிதன் என்னும் வடிகட்டியின் வழியாக இயற்கை ஊடுருவிச் செல்வதுதான் அது.


தியான மனநிலையுடன் நதியோட்டத்தைப் பார்க்கும் எவருடைய மனதில்தான் அனைத்துப் பொருட்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணம் எழாது?


புனித பால் மனித உடலை ஒரு விதை என்கிறார். 'அது இயற்கை உடலாக விதைக்கப்படுகிறது. ஆன்மீக உடலாக முகிழ்த்தெழுகிறது.'


தன்னுடைய சிந்தனையைப் பொருத்தமான குறியீடுகளுடன் இணைப்பதற்கான ஒரு மனிதனின் திறமையானது அவனுடைய ஆளுமையின் எளிமையை சார்ந்தே இருக்கும்.


பெரிய இலக்கியப் படைப்பாளிகளின் மொழி இயற்கையை நேரடியாகச் சார்ந்திருக்கும். 


சொல் என்பது குறியீடுதான். பேச்சின் பகுதிகள் எல்லாமே படிமங்கள்தான். காரணம் ஒட்டுமொத்த இயற்கையே மனிதமனதின் பெரும் படிமம் என்பதுதான்.


சரியாக அவதானிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் ஆத்மாவின் ஒரு அம்சத்தை திறந்து காட்டுகிறது.


'சிறந்த சிந்தனைகள், சிறந்த கனவுகளை விட மேலானவையல்ல' என்ற உண்மையை நமக்கு கற்பிப்பதற்குதான் எந்த அளவு சிரமமான பயிற்சி தேவைப்படுகிறது.


அறிவுள்ள மனிதன் வகை பிரிப்பதிலும், தரப்படுத்துவதிலும், வரிசைப்படுத்துவதிலும் தன் ஞானத்தை வெளிக்காட்டுகிறான்.


மூடர்கள், நல்ல தல்லாதவற்றையெல்லாம் மோசமானது என்கிறார்கள். வெறுக்கத்தக்கதாக இல்லாத அனைத்தையும் சிறந்தது என்கிறார்கள்.


ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட உபயோகத்திற்கு முற்றிலும் பயன்பட்ட பிறகு இன்னொரு உபயோகத்திற்கு புத்தம் புதியதாகத் தயாராகி விடுகிறது.


சூரியன் என்பது என்ன? அது வசந்தத்தின் முதல் உழுதடம் முதல் பனிக் காலத்தில் மூடுபனியால் போர்த்தப்படும் கடைசி வைக்கோல் தண்டு வரை நீளும் காலத்தின் ஒரு குறியீடு அல்லவா?


கடலால் அறையப்படும் கரைப்பாறை ஒரு மீனவன் மனதில் எந்த அளவு உறுதியை வெளிப்படுத்துகிறது என்று எப்படி அறிய முடியும்?


சொற்கள் என்பவை முடிவற்ற மனதின் எல்லைகளுக்குட்பட்ட சிறு உறுப்பு மட்டுமே. அவை ஒருபோதும் உண்மையின் முழுமையை கூறிவிட முடியாது. அவை உண்மையை உடைக்கின்றன, செதுக்குகின்றன, மடித்துக் குறுக்குகின்றன. செயல்களோ சிந்தனையின் முழுமையின் வெளிப்பாடுகள். ஒரு சரியான செயல் நம் கண்களை நிறைத்து, இயற்கை முழுக்க தொடர்பு கொண்டு விரிந்திருப்பதாகத் தோன்றுகிறது.


எந்த இயற்கை விதியாயினும் சரி, அதன் நிரந்தத்தன்மை மீது மனிதனுக்கு ஏற்படும் அவநம்பிக்கையானது மனித வாழ்வின் ஒழுங்கை பாதிக்கும்.


சிந்தனையின் முதல் முயற்சி புலன்களின் சர்வாதிகாரத்தைத் தகர்ப்பதுதான். காரணம் புலன்கள் நம்மை இயற்கையுடன், அதன் ஒரு உறுப்புதான் நாம் என்று நம்பும் படியாக, இணைத்து விடுகின்றன.


புலன்களை சார்ந்த இயங்கும் மனிதன் தன் சிந்தனையைப் புறவயமான பொருட்களுடன் பொருத்திக்கொள்கிறான். கவிஞன் பொருட்களைத் தன்னுடைய சிந்தனையுடன் பொருத்திக்கொள்கிறான். முதலாமவன் இயற்கையை உறுதியான ஒன்றாகப் பார்க்கிறான். இரண்டாமவன் இயற்கையை நிலையற்ற திரவமாகப் பார்க்கிறான்.


கவிஞனுக்கு அழகே இலக்கு. தத்துவவாதிக்கு உண்மை. உண்மையான கவிஞனும் உண்மையான தத்துவவாதியும் வேறுவேறல்லர். எது உண்மையோ அது அழகும் கூட. எது அழகோ அது உண்மையுமாகும்.


நாம் இயற்கை, உண்மை, நீதி ஆகியவற்றை திரைவிலக்கிக் காணும்போது முழுமைக்கும், சார்புநிலைக்கும், கட்டுக்குட்பட்ட நிலைக்கும் இடையேயான வேறுபாட்டை அறிகிறோம்.


இயற்கையுடனான மனிதனின் உறவுதான் மனித வாழ்வைத் தீர்மானிக்கும் அடிப்படையாகும்.


மனிதன் தங்கியுள்ள இந்த பயங்கரமான வாழ்விடத்தில், அவனுடைய திறமைகள் எல்லாமே பொருத்தமான செயல்களாக முடிவின்றி மாறியாக வேண்டிய சூழலில், வெறும் அறிக்கையாக முடியக்கூடிய தகவல்களும் சரி, பழசாக ஆகும் உபயோகங்களும் சரி ஒருபோதும் உண்மையாக இருக்க முடியாது.


பிரபஞ்ச ஆத்மா தனி மனிதர்களிடம் பேசுவதற்கும், அவர்களை தன்னிடன் இட்டுச் செல்வதற்கும் பயன்படும் உறுப்புதான் இயற்கை.


தன் ஆத்மாவின் தேவைகளை திருப்தி செய்யாதவரை ஒருவன் இயற்கையில் ஈடுபட முடியாது.


உங்கள் அறிவை ஒரு அருவமான கேள்வி ஆக்ரமித்துக் கொள்ளும்போது திட்டவட்டமான உருவம் கொண்டதும், உங்கள் கரங்களாலாயே தீர்க்கப்படக்கூடியதுமான பதிலை இயற்கை அளிக்கிறது.


உங்கள் மனம் என்ற தூய இருப்புடன் உங்கள் வாழ்வை எந்த அளவு நீங்கள் இசைவு கொள்ளச் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு மகத்தான சாத்தியங்கள் உங்கள் முன் விரியும்.


***