நவீன ஓவியங்கள் - சி.மோகன்


An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன்.
---------------------
நம் காலத்தின் பெறுமதிமிக்கக் கலைகளில் ஒன்றான நவீன ஓவியம், இன்றளவும் நம்மிடையே அதிகமும் அறியப்படாத, பிடிபடாத புதிர்ப் பிரதேசம். இதன் காரணமாக, சிந்தனைகளிலும் அழகியலிலும் நம்மை மேம்படுத்தக்கூடிய செழுமையான அனுபவங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, இன்றைய பிற கலைச் சாதனங்களோடு ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், முனைப்புடன் இயங்கும் பலரும்கூட, நவீன ஓவியம் குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கேலிப் பொருளாகப் பார்த்து நையாண்டி செய்யும் மனோபாவமும் இருக்கிறது. நம்முடைய சமகாலத்தில் சில தமிழ்த் திரைப்படங்கள், நவீன ஓவியத்தை நகைச்சுவைக் காட்சிக்கான ஒரு பொருளாகவே பயன்படுத்தியிருக்கின்றன. நவீன ஓவியம் என்பது ஒரு பேத்தல் வேலை என்றும், அதை ரசிப்பதாக பாவனை செய்பவர்கள் பம்மாத்துப் பேர்வழிகள் என்பதுமான எண்ணத்தை வெகு மக்களிடம் உருவாக்கும் கைங்கரியத்தை அவை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகின்றன. ஒரு கலை சார்ந்த படைப்பாளிகள், இன்னொரு கலை சார்ந்த படைப்பாளிகளை எவ்விதப் புரிதலும் இல்லாமல் நையாண்டி செய்வது வேதனைக்குரிய விஷயம்.
நவீன ஓவியம் அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று இல்லைதான். ஏனென்றால், அது புதியது. முற்றிலும் புதியது. எந்தவொரு புத்தாக்கமும் அதுவரை நாம் அறிந்திராத ஒன்றாகவே இருக்கும். அறியப்படாதவற்றை அடைவதன் மூலமே, நம் கலை அனுபவம் செழுமையடையும். அறியப்படாதவற்றை அடைவதற்கான ஒரே வழி, அவற்றோடு பயணிப்பதற்கு நாம் பிரயாசைகளும் பயிற்சிகளும் மேற்கொள்வதுதான். நவீன ஓவியம் புரிந்துகொள்ளச் சிரமமாக இருப்பதற்கு, அது தன் வெளியீட்டு நுட்பங்களில் புதுப்புதுக் கோலங்கள் கொண்டிருப்பதுதான் அடிப்படைப் பிரச்னை. அதில் உள்ளுறைந்திருக்கும் சிந்தனை முறைகளும், குறியீடுகளும், குறியீட்டு ரீதியான சிதைப்புகளும், வண்ணங்களின் பிரத்யேக அர்த்தங்களும், படைப்பாளியின் உள்ளார்ந்த தனித்துவமும் அவற்றோடு பயணிப்பதில் சில இடர்களையும் சிரமங்களையும் நமக்கு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் பிரயாசைகள் மூலம் அவை சில புரிதல்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். அது நம் கலை அனுபவ எல்லைகளை வெகுவாக விஸ்தரிக்கும்.

***

நவீன ஓவிய இயக்கத்தின் முதல் அலையாக 1860-களில் கிளாடு மோனே (Claude Monet)யின் சிந்தனை வளத்தால் உருவான இம்ப்ரஷனிஸம்’(Impressionism), தம் கால வாழ்வியக்க சலனத்தின் ஒரு குறிப்பிட்ட கணத்தை ஒருமனப் படிமமாக வசப்படுத்தும் முனைப்புடன் எழுச்சி பெற்றது. 
St. Lazer Railway station - Claude Monet - Impressionism
Claude Monet - Impressionism

Sunrise - Claude Monet - Impressionism

சமகால வாழ்வியக்கச் சலனத்தின் ஒரு கணத்தை, படைப்பு மனதின் கிரகிப்புக்கு ஏற்ப, ஒரு வரைமாதிரியின் அநாயாசமான தன்மையோடு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து படைத்த இம்ப்ரஷனிஸவாதிகளின் அணுகுமுறையில் பால் செசான்( Paul Cezanne) அதிருப்தி அடைந்தார். ஓர் ஓவியத்துக்கான முக்கிய அழகியல் அம்சங்களைப் புறக்கணித்துவிட்டு, ஒளி மற்றும் வண்ணம் சார்ந்து மட்டுமே சலனத்தின் ஒரு கணத்தைக் கைப்பற்ற முனையும் பிரயாசைகளை நிராகரித்தார். பால் செசான், இயற்கையை நேருக்கு நேராக அணுகியபோது, இயற்கையில் காணப்படும் கோடுகள், தளங்கள் மற்றும் வண்ணங்களை மிகவும் நுட்பமாகக் கண்டறிந்து, பகுத்துப் பார்த்து, அவற்றை ஓவிய வெளியில் தீர்க்கமாகவும் அறிவார்த்தமாகவும் வடிவமைப்பதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார். அவருடைய இந்த மாறுபட்ட அணுகுமுறையே `பின்- இம்ப்ரஷனிஸம்’(Post-Impressionism) என அறியப்பட்டது. வடிவவியல் சார்ந்த பகுப்பு முறையில் ஓவியவெளியைக் கட்டமைக்கும் அவருடைய தீட்சண்யமான அணுகுமுறைதான், பின்னர் க்யூபிஸ இயக்கம் உருவாகவும் முகாந்திரமாக அமைந்தது.   

The Bathers - Paul Cezzanne - Post Impressionism

Paul Cezzanne - Post Impressionism

Paul Cezzanne - Post Impressionism

ஓவியப் படைப்பை நிரந்தர மதிப்பு மிக்கதாகக் கோடுகள், வண்ணங்கள், வடிவம், கட்டமைப்புச் சார்ந்து பூரண அழகியல் அம்சங்களோடு உருவாக்க செசான் மேற்கொண்ட தீவிர கலைப் பிரயாசைகளின் தொடர்ச்சியாக, அக்கால கட்டத்தில் – 19-ம் நூற்றாண்டு இறுதியில் - வான்கா(Vincent Van Gogh)காகின்(Paul Gauguin) என்ற இரண்டு மகத்தான படைப்புச் சக்திகள் ஓவியக் கலைவெளியில் ஒளிர்ந்தன. உள்ளார்ந்த தகிப்பிலும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் கலை நுட்பங்களோடு படைப்புகளை உருவாக்கிய அபூர்வக் கலை ஆளுமையாகவும் சூரியக் குழந்தையாகவும் வான்கா வெளிப்பட்டார். வான்காவைப் போன்றே அக உலக வெளிப்பாடுகளில் தனிக் கவனம் செலுத்திய காகின், வண்ணங்களை அர்த்தபூர்வமாகப் பயன்படுத்துவதிலும் படைப்பைக் குறியீட்டுத் தன்மையோடு உருவாக்குவதிலும் தீர்க்கமான நம்பிக்கைகொண்டு செயல்பட்டார்.
Paul Gauguin - Post Impressionism

Paul Gauguin - Post Impressionism

Paul Gauguin - Post Impressionism

Self Portrait - Vincent Van Gogh - Post Impressionism

Vincent Van Gogh - Post Impressionism

Vincent Van Gogh - Post Impressionism

Wheat field with Crows - Vincent Van Gogh - Post Impressionism

Starry Night - Vincent Van Gogh - Post Impressionism

20-ம் நூற்றாண்டின் முதல் கலை இயக்கமாக உருவானது 'ஃபாவிஸம்'(Fauvism). பின்-இம்ப்ரஷனிஸப் படைப்பு மேதைகளான பால் செசான், வின்சென்ட் வான்கா, பால் காகின் ஆகியோரின் அழகியல் அம்சங்களையும் படைப்பாற்றல் வளங்களையும் ஏற்றுக்கொண்டு, வண்ணம், வடிவம் பற்றிய புதிய சிந்தனைகளோடு ஃபாவிஸப் படைப்பாளிகள் இயங்கினர். ஹென்றி மத்தீஸ் (Henri Matisse) இந்த இயக்கத்தின் பிரதான படைப்புச் சக்தியாகவும் உந்துசக்தியாகவும் திகழ்ந்தார். மத்தீஸின் வடிவ அணுகுமுறை, அடுத்து உருவான க்யூபிஸ இயக்கத்துக்கும்; வண்ண அணுகுமுறை, அதனையடுத்து உருவான அரூப பாணி இயக்கத்துக்கும் பாதை அமைத்துக் கொடுத்தன.

The Dance - Henri Matisse - Fauvism

Woman with a Hat - Henri Matisse - Fauvism

Henri Matisse - Fauvism

இரட்டைப் பரிமாணமான ஓவியத் தளத்தில் முப்பரிமாணப் பொருளை, எவ்வித மாயத்தோற்றத்துக்கும் இடமளிக்காமல் எப்படி வெளிப்படுத்துவது என்பதே க்யூபிஸ(Cubism)த்தின் கலை ரீதியான சவாலாக அமைந்தது. வடிவவியல் ரீதியாகப் படைப்புப் பொருளைத் துண்டுதுண்டாகப் பகுத்துப் பரிசீலித்து, எவ்வித மாயத் தோற்றத்துக்கும் இடமளிக்காமல், பொருளின் துல்லியமான வடிவத்தை ஓவியத் தளத்தில் உருவாக்குவதன் வழியாக க்யூபிஸ்ட்டுகள் இந்தச் சவாலைக் கடந்தனர். அதனால்தான், பால் க்லீ ‘வடிவத்தின் தத்துவவாதிகள்’ என்று இவர்களைக் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டுக் கலைவெளியின் முதல் பாதியை வடிவமைத்த மகத்தான கலை ஆளுமையான பாப்லோ பிகாஸோ(Pablo Picasso), க்யூபிஸக் கலை இயக்கத்தின் அபார மேதையாக வெளிப்பட்டார். 

Pablo Picasso - Cubism

Pablo Picasso - Cubism

Guernica - Pablo Picasso - Cubism


ஃபாவிஸ ஹென்றி மத்தீஸ் மனித மன உணர்வுகளை வண்ண வெளிப்பாடுகளில் அரூபமாகவும், க்யூபிஸ பிகாஸோ, பகுப்பு ரீதியான அணுகுமுறையின் மூலம் மனித உருவங்களை அரூப குணத்தோடும் வெளிப்படுத்தினர். எனில், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கி(Wassily Kandinsky) முதன்முறையாக முற்றிலுமான அரூபவெளி (Abstract Art) ஆக்கங்களை உருவாக்கினார். வண்ணங்களும் வடிவங்களும் இசையைப் போலவே மனித ஆன்மாவின் ஆழங்களிலிருந்து எழுகின்றன என்று உணர்ந்த காண்டின்ஸ்கி, மனிதனின் அகத் தேவையைப் பூர்த்திசெய்ய ஓவியக் கலை, இசைபோன்றே அரூபகுணம் கொள்ள வேண்டும் என்று கருதினார். இதுவே அரூப ஓவியப் படைப்பாக்கங்களுக்கு அவரை இட்டுச் சென்றது. மனித மன நாண்களில் இசையை மீட்டும் பிரயாசை கொண்டவையாக இவருடைய அரூப ஓவியங்கள் அமைந்தன.

Wassily Kandinsky - Abstract Art

Sky Blue - Wassily Kandinsky - Abstract Art

Wassily Kandinsky - Abstract Art


நவீன ஓவியக் கலையில் விந்தைவெளியை உருவாக்கிய கலை மேதை பால் க்லீ (Paul Klee). மிகவும் தனித்துவமான ஓவிய மொழி மூலம், புலப்படும் தோற்ற உலகுக்கு அப்பாற்பட்ட புலப்படா உலகின் மெய்மையையும், கனவுலகில் சலனிக்கும் மனித ஆழ்மனக் குணங்களையும் ஓவியப் படைப்புகளாக்கிய விந்தைக் கலைஞன். தொன்மையான வடிவமைப்பு முறைகள், குறியீடுகள் மற்றும் படிமங்கள் மூலமும், குழந்தை ஓவியத்தன்மையோடும் அலாதியான கலைநுட்பங்களோடு படைப்பாக்கத்தில் ஈடுபட்டவர். பால் க்லீயின் கனவுப்பாங்கான படைப்புகளில் சர்ரியலிஸ சாயல் தென்பட்டாலும், அவற்றில் விந்தைத்தன்மையும் அதன் மெய்மையுமே பிரதானமாக அமைந்தன.

Paul Klee - Abstract Art

Villa R - Paul Klee - Abstract Art

Tweeting machine - Paul Klee - Abstract Art


யதார்த்த உலகின் காரண-காரிய நடைமுறைத் தர்க்கத்தை முற்றாக நிராகரித்த கலை இயக்கம் சர்ரியலிஸம் (Surrealism). இதற்கு முன்னோடியாக அமைந்தது டாடா’(Dada Art Movement) என்ற கலை இயக்கம். முதல் உலகப்போர் (1914-1918) காலகட்டத்தின்போது, கலைஞர்களிடம் ஆழமாகப் பதிந்த வெறுப்பும் விரக்தியுமே இந்த இயக்கத்துக்கான ஆதாரமாகியது. போரின்போது கூட்டாக நிகழ்த்தப்படும் மனிதக் கொலைகளைப் பித்துப் பிடித்த நிலையில் வெறும் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருக்க நேர்ந்த கையாலாகாத்தனத்தை உணர்ந்த அவலத்திலிருந்து உருவான இயக்கம். போருக்கான வித்து முளை விடுவதற்கு அறிவும் தர்க்கமுமே காரணம் என்று உணர்ந்தனர். அதனால்தான், நடைமுறைத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டதாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும் அமையும் படைப்புச் செயல்பாடே ஒரே தீர்வு என்று கருதினார்கள். இந்த இயக்கம் மிகக் குறைந்த காலமே நவீனக் கலையில் நீடித்தது.

1924-ல் வெளியிடப்பட்ட முதல் சர்ரியலிஸ அறிக்கை டாடாவாதிகளைப் பெரிதும் ஈர்த்ததின் தொடர்ச்சியாக, அவர்களில் பலரும் சர்ரியலிஸ இயக்கத்தில் இணைந்தனர். கனவுப்பிரதேசங்களையும் ஆழ்மன இயல்புகளையும் கலையில் வெளிப்படுத்துவதற்கான படைப்புச் செயல்முறைகளைக் கண்டடைவது என்ற சர்ரியலிஸத்தின் தீர்க்கமான குறிக்கோள், நடைமுறைத் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட உலகைப் படைப்பது என்ற டாடாவின் கலைப் பாதைக்கு நெருக்கமாக இருந்ததே காரணம். மேலும், அக்காலகட்டத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த உளவியல் மேதைகளான சிக்மண்ட் ஃப்ராய்டு மற்றும் கார்ல் யூங் ஆகியோரின் உளவியல் கோட்பாடுகள் சர்ரியலிஸவாதிகளுக்குப் பெரும் உந்துதலாக அமைந்தன. ஃப்ராய்டின் ஆழ்மனம் பற்றிய சிந்தனைகளும் கனவுகள் பற்றிய விளக்கங்களும், யூங்கின் தொன்மமாகத் தொடரும் கூட்டு நனவிலி (collective unconscious) பற்றிய சிந்தனைகளும் இந்த இயக்கத்தின் உத்வேகத்துக்கு உறுதுணையாகின. சர்ரியலிஸ இயக்கத்தின் மகத்தான படைப்புச் சக்தியாக சல்வடோர் டாலி (Salvador Dali) உருவெடுத்தார். அவர் தன்னுடைய சர்ரியலிஸ ஓவியங்களை, “கையால் வரையப்பட்ட கனவின் புகைப்படங்கள்” என்றார்.

Salvador Dali - Surrealism

The Temptation of St.Antony - Salvador Dali - Surrealism

The persistence of memory - Salvador Dali - Surrealism


இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, 1940-களில் நவீனக் கலை உலகின் மையக் கேந்திர அந்தஸ்து, பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், இலட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின. இவற்றின் விளைவாக, அமெரிக்காவின் முதல் கலை இயக்கமாக அரூப வெளிப்பாட்டியம் (Abstract Expressionism) உருவானது. உருவ வெளிப்பாட்டை அறவே புறமொதுக்கிய கலை இயக்கம். அர்த்தங்களின் உலகிலிருந்து பூரணமாக விடுபட்டது. படைப்பாக்கத்தின்போதான படைப்பாளியின் மனோநிலைகளையும் உணர்ச்சிகளையும் படைப்புவெளியில் அகப்படுத்தும் குணம் கொண்டது.

இந்த இயக்கத்தைக் கண்டடைந்த அபூர்வ படைப்புச் சக்தி, ஜாக்ஸன் பொலாக்(Jackson Pollock). அதுவரையான ஐரோப்பியக் கலை வரலாறு அளித்த சகல கலை நுட்பங்களையும், முன்மொழியப்பட்ட அணுகுமுறைகளையும், கருத்தாக்கங்களையும், படைப்புப் பொருளையும் முற்றிலுமாகப் புறக்கணித்து, பேராற்றல்மிக்கத் தனித்துவ சக்தியாகப் பொலாக் வெளிப்பட்டார். ஓவியவெளியில் ஒன்றை மறு உருவாக்கம் செய்வது, மறு வடிவமைப்பு செய்வது, பரிசீலிப்பது, கற்பனையான அல்லது நிஜமான ஒரு பொருளை வெளிப்படுத்துவது போன்ற கலை அணுகுமுறைகளுக்கு மாறாக, ஓவியவெளியில் ஒரு செயலை நிகழ்த்திக் காட்டுவதாகக் கலை பொலாக்கிடம் புது மலர்ச்சி பெற்றது. ஒரு புதிய கலை இயக்கம் எழுச்சி பெற்றது.

The Blue Pole - Jackson Pollock - Abstract Expressionism

Jackson Pollock - Abstract Expressionism


அரூப வெளிப்பாட்டிய இயக்கத்தில் பொலாக்கிற்கு முற்றிலும் மாறுபட்டவராகப் புதிய சாத்தியங்களில் வெளிப்பட்ட படைப்புச் சக்தி, வில்லெம் டி கூனிங்(Willem de Kooning). பொலாக்கிடம் அலாதியாக வெளிப்பட்ட லயம், ஒழுங்கிற்கு மாறாக, குழப்பங்களும் சிதைவுகளும் அதிர்வுகளும் கூனிங்கிடம் உக்கிரமாக வெளிப்பட்டன.

Willem de Kooning - Abstract Expressionism

Willem de Kooning - Abstract Expressionism

Woman I -Willem de Kooning - Abstract Expressionism


நவீன ஓவியக் கலையின் இயக்கங்கள், கோட்பாடுகள், வெளியீட்டு அணுகுமுறைகள், படைப்புச் சக்திகள், தனித்துவங்கள் ஆகியவற்றின் பரிசீலனைகளாக அமைந்த இந்தப் பயணத்தில் சில பாதைகள் தென்பட்டிருக்கும். சிறிது வெளிச்சம் கிடைத்திருக்கும். அறிவதற்கான ஆர்வமும் முனைப்பும் நம்மை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.
***

An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்' by சி.மோகன்.

---------------------------------------------------------------
சில காணொளிகள் :







===================================


Comments

Popular posts from this blog

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

இயற்கையை அறிதல் - எமர்சன்