வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று மழைப்பாடல் வாசித்து முடித்தேன். வெண்முரசு வாசகர்கள் அனைவரும் பாண்டவர்களின் மறைவுக்கு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நான் பாண்டுவின் மரணத்திற்கு கண்ணீர் விடுகிறேன்.

தவளைகளின் இறைஞ்சல் போல என் மனம் முழுக்க நாவலின் பல்வேறு  தருணங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

உண்மையாகவே இந்நாவல் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்று அப்படியே சிதறடித்து விட்டது. எவ்வளவு வாழ்க்கைகள், நிகழ்வுகள், உச்சங்கள், சரிவுகள், பிறப்புகள், இறப்புகள், நிலகாட்சிகள். 

பாத்திர படைப்புகளை கருப்பு வெள்ளை என்று பகுக்காமல் சாம்பல் பகுதியின் வெவ்வேறு அழுத்தங்களில் உள்ளதால் அனைத்தையும் மிக நெருக்கமாக உணரமுடிகிறது.

பாலைநில போர்வீரன் சகுனி தன் தமக்கைகாக நெகிழும் போதும் பீஷ்மரை கட்டிப்பிடித்து கண்ணீர் விடும் போதும் அப்பாலை நிலத்தில் ஊரும் ஒற்றை கிணற்றை கண்டேன்.

குந்தியின் அறிமுக காட்சியே அபாரம். யாதவ பெண்ணிலிருந்து அரசியாக, கணவனுக்கு தாயாக, மதியூகியாக அவளின் பாத்திரப்படைப்பு பிரம்மிக்க வைக்கிறது.
அவள் தன் இடம் உணர்ந்து அதை தக்கவைத்து கொள்ளவே முதலில் விழைகிறாள். ஆனால், எதிர்பாராமல் தேவயானியின் மணிமுடி சூடி அமர்கையில் அதிகாரத்தின் ருசி அறிகிறாள். அத்தருணத்தை வகுத்த ஊழினை வாழ்த்துவோம்!

திருதிராஷ்டிரன் மூர்க்கமும் அன்பும் ததும்பும் ஒரு குழந்தையாகவே உள்ளான். தம்பிகளிடம் நெகிழ்வு, இசையுடன் அவனது நெருக்கம் , தீர்கசயாமருடனான உறவு, பிறந்த மைந்தனுக்கு கண் உள்ளதா என்று அவன் கேட்பது என அனைத்தும் அவன் கதாபாத்திரத்தின் அனைத்து கோணங்களையும் காட்டுகிறது.

குழந்தை பிறப்புகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக துரியோதனன் பிறப்பும், அதற்கு முன்பாக சகுனியுடன் பகடையாடும் கலியின் உருவம் வரும் காட்சிகள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டியவை.

அர்ஜுனன் பிறப்பது ஒரு மாபெரும் கனவு. உங்கள் அனைத்து பயணங்களும் அனுபவங்களும் வெண்முரசு எழுத்துவதற்காகவே ஊழால் விதிக்கப்பட்டன போலும்.

விதுரன், சகுனி, குந்தி, சத்யவதி போன்ற மதியூகிகள் ஆடும் அரசியல் விளையாட்டை விட பாண்டுவின் திருதிராஷ்டிரனின் அம்பிகையின் நெகிழ்வு தருணங்களே மனதிற்கு நெருக்கமாக உள்ளது. அனைத்து அறிவுகளுக்கு மேல் அந்த உணர்ச்சி மட்டும் நேரடியாக அகத்தின் ஆழத்தை தொடுகிறது. அல்லது நான் அப்படி கற்பித்து கொள்கிறேனா?

கங்கையின் ஆழத்தில் ஊரும் மண்மகள் சீதையின் கண்ணீர், ஆறுமுகனை வழிபடும் பாண்டு போன்ற புராணங்கள் தக்க இடத்தில் அமைவதனால் அதன் அழுத்தம் கூடுகிறது. எவ்வளவு பெரிய படிம களஞ்சியத்திருக்கு நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு தான் ஏற்பட்டது.

காலம் ஒரு பெரிய சுழியாக நிகழ்ந்த வற்றை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கிறது. இந்நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்திற்கும் தத்தம் சாயலில் ஒரு புராண கதாபாத்திரம் உள்ளது. ஒரு சூத கதை உள்ளது. ஆனாலும் மீள மீள நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.நூறாண்டு காணாத பெரு மழை பெய்து
மாபெரும் வெள்ளம் வந்து நகரை மூழ்கடிக்க ஆரம்பித்த நாவலின் அரசியல் ஆட்டம் அந்நகரம் தகிக்கும் கோடையில் வாட பாண்டுவின் மரணத்தில் முடிகிறது. ஆம் களத்தில் சில காய்கள் நீக்கப்ப்டுகின்றன. புதிய காய்கள் விரைவில் அவ்விடத்தை பிடித்துக்கொள்ளும். தவளைகள் இந்திரனிடமும் வருணனிடமும் இறைஞ்சுவது மழைக்காக மட்டுமல்ல!

தங்கள்
கிஷோர் குமார்.

Comments

  1. வெகு அழகான பதிவு. நன்று கிஷோர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்