மைத்ரி : துளியின் பூரணம்
சரியாக ஓராண்டுக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியான எமர்சனின் 'இயற்கையை அறிதல்' புத்தகத்தை வாசித்தேன். அதன் கவித்துவ உரைநடையும், ஒரே நேரத்தில் அந்தரங்கமாகவும் உலகுதழுவியும் பேசும் அதன் த்வனியும் என்னை வெகுவாக ஈர்த்தது. நூலின் பல இடங்களில் அடிக்கோடிட்டு மீண்டும் மீண்டும் வாசித்தேன். அதுபோதாமல், அடிக்கோடிட்ட வரிகளை தட்டச்சிட்டு என் வலைப்பக்கத்தில் பதிவேற்றினேன். பின்னர் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தியதால் சில நாட்களில் அந்தப் பதிவும் என் நினைவிலிருந்து அகன்றுபோனது.
சமீபத்தில், முன்னர் பதிவேற்றிய அந்த பக்கத்தின் சுட்டி jeyamohan.in தளத்தில் பகிரப்பட்டது. நாள்தவறாமல் ஜெ அவர்களின் தளத்தை வாசிப்பவன் நான். அப்படியொருநாள் என் பதிவை அவர் தளத்தில் கண்டதும் மனம் பெருங்களிப்படைந்தது. எமர்சனின் அழியா வரிகளுக்குள் சென்று மீண்டும் அந்த கவித்துவ மனநிலையில் சில நாட்கள் சஞ்சரிக்க முடிந்தது. ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் அனிச்சையாக மனம் எமர்சனின் வரிகளில் சென்று முட்டிக்கொண்டு இருந்தது.
எழுத்தாளர் அஜிதன் அவர்கள் எழுதியிருக்கும் முதல் நாவலான 'மைத்ரி'யை வாசித்து முடித்து, அதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கையில் இயல்பாக எமர்சன் புன்னகைத்தார்.
இயற்கையை நேசிப்பவன் யார்? எவனுடைய வெளிப்புலன்களும் உட்புலன்களும் பரஸ்பரம் சரியாக பொருந்திப் போகின்றனவோ அவன்தான்.
இந்நாவலுடன் இவ்வரிகள் எப்படி முழுமையாக பொருந்திப்போகும் என்று தெரியவில்லை. ஆனால், இந்நாவலின் நாயகன் 'ஹரன்' மேற்கூறியது போல் அதிகூர்மையான புறப்புலனும் அதை நுட்பமாக தொட்டெடுத்து விரித்துக்கொள்ளும் அகப்புலனும் கொண்டவன்.
ஹரன் மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு சில நாட்களே இம்மொத்த நாவலும். துளி துளியென உலகை இரசித்து வாழ்ந்து, நிகழ்வன எத்தகையதாயினும் அதனுள் தன்னை முழுதாக ஈடுபடுத்திக்கொண்டு அவ்வனுபத்தை அறிதலாக சுவீகரித்துக் கொள்ளும் மன அமைப்பு கொண்டவனாக ஹரன் அறிமுகமாகிறான்.
அவன் கேதார்நாத் நோக்கி செல்லும் பயணத்தில் மைத்ரி அறிமுகமாகிறாள். ஹரனுக்கு மைத்ரி வாயிலாக பல புதிய உலகங்கள் திறக்கின்றன. முதுதந்தையின் தாலாட்டு முதல் சௌலாய் லட்டு வரை.
இந்நாவலின் வெகு சிறப்பான அம்சம் என்பது வடிவத்தின் எல்லைகளை உணர்ந்து அதற்குள் முழுமையாக ஓருலகை உருவாக்கி காட்டியமைதான். குறைவான பக்கங்களுக்குள்ளாகவே பரந்த ஒரு நிலப்பரப்பின் பல்வேறு முகங்கள் மிக சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. சிலம்பிசைக்கும் மந்தாகினி கரையோரம் தொடங்கி கரித்தோல் உடுத்தி எழுந்து நிற்கும் கேதார்நாத் சிகரம் முடிய…
நாயகன் மேற்கொள்ளும் பயணம் என்பது இலக்கிய வடிவின் அழியா கருப்பொருட்களுள் ஒன்று. யுலிஸஸ் முதல் அர்ஜுனன் வரை. ஆனால் அணைத்துப் பயணங்களும் இக்காவிய குணத்தை அடைவதில்லை. பயணங்களினூடாக நாயகனின் அகம் உள்வாங்கிக்கொள்ளும் தகவமைப்பு தான் முக்கியமானது. அகம் அடையும் தரிசனமே பயணத்தை காவியமாகவும் பயணியை நாயகனாகவும் மாற்றுகிறது.
அந்தவகையில் உத்தராகண்டின் மலர்கள் செறிந்த மலைவெளியில், மைத்ரி மூலம் ஹரன் 'மாயை'யை கண்டுகொள்கிறான். இங்கு நிறைந்து ததும்பும் அணைத்தும் அதுவே என்று உணர்கிறான். தாயின் இழப்பும் கௌரியின் பிரிவும் அவன் அகத்தில் பெரும் பள்ளங்களாக வீழ்ந்திருக்கின்றன. அவனை புத்தம் புதிதாய் மாற்றி முழுமையானவனாக உணரவைத்தப் பின் மைத்ரி மறைகிறாள்.
புறத்தே பயணிப்பவனுக்கு உள்ளே அகம் இருப்பதை போல, புறவெளிக்கும் அடியில் பண்பாடென்ற அகம் உண்டு. அதுவே நிலத்தின் அடியே சாரமென ஓடிக்கொண்டிருப்பது.
உத்தரகண்டின் எழில் ததும்பும் நிலத்திற்கு அடியே உள்ள பண்பாட்டு அம்சங்களும் நாவல் முழுக்க நிறைந்துள்ளது. கோயில் விழாக்கள், விக்கிரகங்கள், அணி நகை, உடை அலங்காரங்கள், இசை வாத்தியங்கள், உணவு வகைகள், தொன்மங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் என ஒரு புதிய நிலத்தின் பண்பாட்டு அம்சங்கள் எவ்வித விலக்கமும் இன்றி வாசகனுக்கு இயல்பாக கடத்தப்படுகின்றன.
நாவலின் மேற்கூறிய அம்சத்திற்கு காரணம் இதன் மொழிநடை தான். நாவலின் துவக்கத்தில் வரும் மந்தாகினி நதியே நாவலின் ஓட்டத்தை தீர்மானித்திருக்கும் என்பதைப்போல தெள்ளிய நீரோட்டம் போன்ற மொழி. நிறைய கவித்துவ உவமைகள் புதிதாய் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் சிலவை புலன் அனுபவங்கள் மயங்கும் விதமாகவும் உள்ளன. நான் மிகவும் ரசித்த ஒன்று, ஹரனும் மைத்ரியும் பிரமாண்ட தேவதாரு மரங்கள் வீற்றிருக்கும் காட்டை கடந்து செல்கிறார்கள். அங்கே அதிப்பிரமாண்ட, மூப்படைந்த, அரை ஏக்கர் அளவுக்கு குடைவிரித்த மாபெரும் தேவதாரு மரத்தை கண்டு ஹரன் நினைக்கிறான்,
"அந்த மொத்த காடும் ஒரு பெரும் இசைவெளி என்றால் அதன் தாழ்ந்த அடிநாதமென அந்த மரம் நின்றது. ஆழத்திலிருந்து எழும் ஓங்காரம்."
நாவல் முழுக்க செறிந்திருக்கும் புறத் தகவல்கள் இதை ஒரு இயல்புவாத நாவலுக்கு மிக அருகே கொண்டு செல்கிறது. ஆனால் கண்டு கேட்டு உணரும் ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஹரனின் ஆளுமையும் குரலும் இருப்பதால் இதை முழுமையாக அவ்வாறு வகைப்படுத்திவிட இயலாது.
பிரமாண்ட காலத்தை வரையும் திறனும், மானுடத்தின் உச்ச தருணங்களை புனையும் ஆற்றலும், அணைத்திற்கப்பால் எஞ்சுவதென்ன என்று திகைக்க வைக்கும் வெறுமையும் பெருநாவல்களுக்குரிய இயல்புகள்.
அஜிதனின் இச்சிறுநாவல், முழுவதும் தன்னை இனிமையால் நிறைத்து அதில் திளைக்க வைப்பது. துளியின் பூரணத்தை உணரச்செய்வது. பெருநாவல்களின் வீச்சும் ஆற்றலும் இதில் இல்லை. ஆகவே, அதன் பெருமூச்சுகளும், வீழ்ச்சியின் சரிவுகளும் இதில் இல்லை.
மாறாக, மொத்த உலகையும் நிறைக்கத் துடிக்கும் ஏதோ ஒன்றின் இனிய தவிப்பு மட்டுமே பக்கங்கள்தோறும் நிறைந்திருக்கிறது.
***