பேசாதவர்கள் - ஜெயமோகன் - வாசிப்பு குறிப்பு
பேசாதவர்கள் கதையின் மையப் படிமம் அந்த மனிதச்சிறைக்கூண்டு -தூக்குபூட்டு- தான். இப்படியான கொடூர தண்டனைகள் கொடுக்க துளியும் குற்றவுணர்வற்ற சமூகங்களால் தான் இயலும். அவர்கள் எந்தவிதமான உணர்வுபூர்வ பிணைப்பும் இல்லாமல் ஒரு மேலான கடமையை ஆற்றுவதைப் போல் தான் அத்தண்டனைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.
வளர்ச்சிப் பாதையில் செல்லும் எந்த ஒரு சமூகமும் இப்படியான வரலாற்றை திரும்பி பார்க்கையில் இக்கொடூர அடக்குமுறையின் அவலம் உறைத்து, குற்றவுணர்வு ஏற்படும். ஆனால், அதற்காக 'நாங்கள் செய்தது அனைத்துமே பிழையானவை' என்று பகிரங்க மன்னிப்பு கோர முடியாது. அது -தங்களால் சமைக்கப்பட்ட- தங்கள் வரலாற்றை, அடையாளத்தை முற்றிலும் நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.
இத்தகைய இக்கட்டான சூழல் தான் மாடன்கள் முளைக்கும் விளைநிலமாகிறது. ஒடுக்கவும் வேண்டும் அதன் குற்றவுணர்விலிருந்து மீளவும் வேண்டும் என்ற மனநிலையின் விளைவாகதான் மாடன்கள் தோன்றுகிறார்கள்.
ஆயினும் ஒரு சமூகம் எத்தனை பலிச்சின்னங்களைதான் எழுப்ப முடியும். எனவே காலப்போக்கில் நேரடி ஒடுக்குமுறையை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்ளும். அதன் கசப்பான எச்சங்கள் இருட்டறையில் தூக்கி வீசப்படும்.
மாடன்களாக மாறிய பலிகள் கண்முன்னே உள்ளது. ஆனால், குற்றவுணர்வினால் தீண்டப்படாத இன்னும் பலநூறு பலிகள் கேட்பாரற்று 'பேசாதவர்களா'க அவ்வெச்சங்களில் உறங்கிக்கொண்டுள்ளது.
அவ்வெச்சங்களில் ஒன்றுதான் அந்த தூக்குபூட்டு. அதன் நாடி துடிப்பென்பது அப்பேசாதவர்களின் ஓலத்தின் கார்வையும், நோக்குபவரின் நடுக்கமும் இணைத்த ஒன்றுதான்.
துணிகள் சுற்றிய பொம்மையாய் மழுங்கடிக்கப்பட்டு 'டம்மி'யாய் பயன்படுத்தப் படும் அது, தன் விட்டுப்போன கண்ணியை கறம்பனில் கண்டடைகிறது. அல்லது அவன் கண்டடைகிறான்.
அந்த பொம்மைக்கு நீலி தீ வைக்கையில், எறிந்து அழிவது பொம்மைத் துணிகள் மட்டுமே. இரும்புக்கூடு அழியாமல் நிற்கும். அக்குரல்களை நீலி கட்டவிழ்த்து விடுகிறாள். வரலாற்றின் கோர பக்கங்கள் பேசாதவர்களின் குரல்களினூடாக வெளிப்படும்.
Comments
Post a Comment