ஜீவிதத்தின் கண்ணீரும் குருதியும்: அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

வெகு நாட்களாக என் புத்தக அலமாரியில் வாசிக்கப் படாமலிருந்தது அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவல். சிறுநாவல் தானே இன்று வாசிக்கலாம் நாளை வாசிக்கலாம் என்று அப்படியே தள்ளிப்போய்விட்டது.

இப்போது இதை வாசித்து முடித்தவுடன் ஒரு மேதையின் மாஸ்டர்ப்பீஸை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வைத்துவிட்டது.


தண்ணீர் பஞ்சத்தில் அல்லற்படும் சென்னை நகரமே இந்நாவலின் கதைக்களம். தண்ணீருக்காக மக்கள் விடிவதற்கு முன்பிருந்தே தெருத்தெருவாக அலைகிறார்கள். 

'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கிணங்க மனதின் சமநிலை, குடும்ப அமைப்பு, சமூகச் சூழல், அரசாங்க செயல்பாடு என ஒவ்வொன்றும் எப்படி அமையாமல் அல்லற்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் காட்சிப்படுத்தும் நாவல்.


இக்கதையில் பெண்களே பிரதான பாத்திரங்களாக உள்ளனர். இருவேறு துயர வாழ்வினூடாக பயணப்படும் இரு சகோதரிகள் சாயா - ஜமுனா, வாழ்வின் குரூர உகிர்களைக் கடந்து துணிச்சலுடன் வாழும் டீச்சரம்மா, நோய்ப்படுக்கையில் மனம் பிறழ்ந்து கிடக்கும் ஜமுனாவின் தாய், இந்நாவலின் உச்ச கணத்தில் வரும் தெலுங்கு பிராமண கிழவி எனப் பெண்களின் வழியாகவே அக்காலகட்டத்தின் இருளை காட்சிப்படுத்தியுள்ளார் அசோகமித்திரன். 


இவர்கள் மூலமாக நாவலை நகர்த்தியது தற்செயலானது அல்ல. தண்ணீருக்கும் பெண்களுக்குமான தொடர்பு புராண காலம் முதலே இருந்து வருகிறது. தண்ணீருடன் அதிகம் புழங்குபவர்கள் என்பதைத் தாண்டி ஒரு ஆன்மீக இசைவு இருவருக்குமிடையே உள்ளது. அவர்கள் மனதில் உள்ள ஈரத்திற்கும் தணுமைக்கும் நீர் குறியீடாகிறது. இக்கோணத்தில் அணுகும்போது தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் புறரீதியான பிரச்சனை மட்டுமல்லாமல் அகத்தளத்திலும் விரிகிறது. 


தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் தாவரங்கள் செழித்து வாழ இயலாது. அவை கருகி அழியும். அதைமீறி அங்கே வாழும் தாவரங்கள் தங்களை முட்களாக மாற்றிக்கொண்டவையாகவே இருக்கும். இந்நாவலில் வரும் பெண்களும் இவ்விரு வகைப்பாட்டிற்குள் வருகிறார்கள். 


இந்நாவலில் எண்ணை மிகவும் கவர்ந்தது இதன் வடிவம் தான். நாவலின் அளவை -100 பக்கங்கள்- வைத்து இதன் வீரியத்தை குறைத்து மதிப்பிட முடியாது. 

முழுக்க முழுக்க யதார்த்தவாத அழகியலில் ஆசிரியரின் குரல் துளியுமின்றி புகைப்பட ஃபிலிமை போல் பயணிக்கிறது நாவல். ஆனால் இரு இடங்களில் இவ்வெல்லையை தாண்டுகிறது - ஒன்று, தண்ணீர் குடம் தூக்கிச்செல்லும் ஒரு கிழவி அதை கீழே தவற விடுகிறாள். அதை பார்த்துக்கொண்டிருக்கும் ஜமுனாவின் அகத்தில் ஒரு உக்கிர திரிபு நிலை ஏற்படும் இடம். மற்றொன்று, ஜமுனாவிடம் டீச்சரம்மா தான் கடந்து வந்த பாதையை ஒரு செவ்வியல் துயர கதாபாத்திரம் போல் கூறுமிடம் - இவ்விரு இடங்களும் நாவல் வாசிப்பனுபத்தை பல தளங்கள் மேல் ஏற்றிச்செல்கின்றன.


மனதில் நிலைக்கும் பல படிமங்கள் நாவல் முழுக்க நிறைந்துள்ளன. காலி குடங்கள், சாக்கடை நீர் கலந்து வரும் குடிநீர், தெரு முழுதும் உள்ள சேர் சகதி, அதில் சிக்கிக்கொல்லும் வாகனங்கள், உடைபடும் நீர்க்குழாய்கள்… என அழுத்தமான படிமங்கள் வாசித்து முடித்தவுடன் இயல்பாக மேலெழுகின்றன.


இவ்விருள் அனைத்தையும் மீறியும் வாழ்வென்பது வாழ்வதற்காக தான் என்று ஒரு நம்பிக்கையின் ஒளியை காட்டித்தான் இந்நாவல் நிறைவடைகிறது. சாயாவும் ஜமுனாவும் கடற்கரைக்குப் போகலாம் என்று முடிவெடுத்து கிளம்புகிறரர்கள். ஆம், நீரின் ஆதியும் அந்தமுமான சமுத்திரத்தை நோக்கி. அங்கின்றி வேறெங்கு அவர்கள் நம்பிக்கையின் ஒளியை அள்ளிக்கொண்டு வர முடியும்…


***

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்