யதி : சன்யாசம் சிலாகிப்பு சறுக்கல்
பா. ராகவன் எழுதிய யதி நாவல் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொண்ட நான்கு சகோதரர்களின் கதை.
ஒரே வீட்டின் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு காலங்களில் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்கள். இந்நால்வரும், தங்கள் தாயார் மரணத்தை நெருங்குவதை அறிந்து மீண்டும் சந்திக்கின்றன.
பொதுவாகவே துறவு என்பது மனகொந்தளிப்பு சார்ந்தது. அகத்தில் நிகழும் கொந்தளிப்புகளுக்கு புறத்தே விடை தேடுவது. துறவு சார்ந்து எழுதப்படும் நாவல்கள் பொதுவாக கொந்தளிப்போடு தான் இருக்கும். ஆனால், இந்நாவலின் கதைசொல்லியாக கடைசிமகன் விமல் வருகிறான். வாழ்வை ஒரு பறவையின் இறகைபோல் வாழ்ந்து கடப்பவன். எதன் மீதும் விருப்பும் வெறுப்பும் இன்றி அக்கணத்தில் தோன்றுவதை நிகழ்த்துபவன். இப்படி ஒருவன் மூலம் கதைசொல்லும் போது ஒரு அபூர்வமான அனுபவம் ஏற்படுகிறது. மற்றொரு ஈர்கக்கூடிய கதாபாத்திரமாக வருபவன் இரண்டாம் அண்ணன் 'வினய்'. சாக்த பாதையை தேர்ந்தெடுத்து பல்வேறு சறுக்கல்களை சந்தித்து தான் விழையும் இடத்தை அடையமுடியாது தவிப்பவன்.
அடுத்ததாக, தன்னை ஒரு இயக்கத்தில் பொருத்திக்கொண்டு ஒரு 'நல்ல' துறவியாக வரும் மூன்றாவது அண்ணன் வினோத்.
இறுதியாக, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இந்நாவல் முழுக்க வியாபித்து வசீகரிக்கும் கதாபாத்திரமான மூத்த அண்ணன் விஜய்.
இந்நால்வரும் தங்கள் பாதையில் கடந்து வந்தவை அனைத்தும் விமலின் பார்வையினூடாக வெளிப்படுகிறது.
இந்நாவலின் நிறைகள் :
1. வலுவான நிலக்காட்சி அனுபவம்:
இந்நாவல் இந்தியா முழுக்க பல்வேறு நிலப்பகுதிகளில் நிகழ்கிறது. சில இடங்கள் சிறு தீற்றல்கலாகவும் சில இடங்கள் வலுவாகவும் பாராவின் எழுத்தின் மூலம் பதிவாகியுள்ளது. குறிப்பாக திருவிடந்தை, மடிகேறி போன்ற இடங்கள் வாசகன் மனதில் நிலைத்து நிற்கும்.
2. புன்னகைக்கும் கதைசொல்லி:
கடைசி மகன் 'விமல்' கதைசொல்லியாக வருவது இந்நாவலுக்கு தனித்துவமான ஒரு flavourஐ கொடுக்கிறது. விமலின் ஒரே லட்சியம் சுதந்திரம் மட்டுமே. மற்ற அனைத்தையும் அதற்கான கருவிகளாக கருதுபவன். உள்முகமாக அடங்கி செல்லாது வெளிப்புறமாக வியாபிப்பதை தன் யோகமாக கொண்டவன். சிறுவயதில் இவன் மூலம் வெளிப்படும் குழந்தைத்தனங்களும் வளரவளர அவன் கண்டடையும் உணர்தல்களும் அவதானிப்புகளும் அருமை. குருவுடனான அனுபவங்கள், அரசியல் சாகசங்கள் என அனைத்தும் வாசிக்கும் போது நல்லதொரு அனுபவத்தை ஏற்படுத்தியது.
3. சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்:
இந்நால்வரும் தத்தமது துறவு பாதைகளில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை சந்திக்கின்றன. ஒவ்வொருவரும் தனித்துவமான குணாதிசயம் கொண்டவர்கள். விமலின் குருநாதர், சொறிமுத்து சித்தன், கேசவன் மாமா என மனதுள் நிற்கும் பல கதாபாத்திரங்கள் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளன.
நாவலின் குறைகளென எனக்கு படுவது:
1. நாவலா? தொடர்கதையா?
மொத்த நாவலையும் ஒரே வாசிப்பில் வாசிக்கும் போது பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் கூறப்படுவதாலும் நிகழ்வுகள் பலமுறை நினைவுகூற படுவதாலும் பெரும் அயற்சி ஏற்படுகிறது. இந்நாவல் தினமணி இணையதளத்தில் தொடராக வெளியானது. தொடர்கதை வடிவத்திற்கு இது பொருந்துமே ஒழிய ஒரு தொடர்கதை என்றும் நாவலாகாது.
2. மொழியும் சித்தும்:
பலதரப்பட்ட சித்தர்கள் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளனர். நவீன அறிவியலால் விளக்கமுடியாதை வியக்கவைக்கும் பல்வேறு சித்து வேலைகளிலும் ஈடுபடுகின்றன. அற்புதங்கள் நிகழ்த்துகின்றன. இதில் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் பகுத்தறிவு விமர்சனமும் கிடையாது. ஆனால் ஆரம்பத்தில் இவை அளித்த பரவசம் நாவல் செல்ல செல்ல சலிப்பூட்டகூடியதாக மாறுகிறது. அந்த அளவிற்கு நாவல் முழுக்க இவை ஆக்கிரமித்து கொள்கின்றன. இப்படி அமையும் பட்சத்தில் நாவலின் மொழி கொண்டு இச்சலிப்பை நீக்கிருக்கலாம் [இதை வெற்றிகரமாக கையாண்ட நாவல் யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம்]. தர்கத்தின் அடுக்குகளை குலைத்து போடும் நாவல் தட்டையான மொழிநடையை கொண்டுள்ளது உவப்பாக படவில்லை.
3. விறுவிறுப்பு :
எனக்கு பிடித்த சில நகைச்சுவை படங்களில் கடைசி இருபது நிமிடம் சண்டைக்காட்சி என்ற பெயரில் ஒன்றை வைத்து இனிமையான அனுபவங்களை கெடுத்துவிடுவார்கள். அதுபோல இந்நாவலிலும் கடைசி இருநூறு பக்கங்களை தாண்டுவதற்க்கு பெரும் பிரயத்தனம் படவேண்டியதாயிற்று. திருப்பங்கள் என்ற பெயரில் மிகவும் அயர்ச்சியூட்டும் பகுதிகள் இவ்விறுதி பக்கங்கள்.
நான் இதுவரை வாசித்த பெருநாவல்கள் அனைத்தும் மிகவும் சோர்வும் வெறுமையும் ஏற்படுத்தும் வண்ணம்தான் முடியும். அவ்வெறுமையின் நோக்கம் ஒரு முழுவாழ்வை வாழ்ந்து மீண்ட அனுபவ ஞானத்தையும் கனிவையும் அளிப்பதாகவே இருக்கும். இந்நாவலைப் போல முடித்தால் போதும் என்று அயர்ச்சி யூட்டியவை இதுவரை எதுவும் இல்லை.
***
Comments
Post a Comment