வெக்கையும் சாரலும் : பூமணியின் வெக்கை நாவல்
வெக்கையும் சாரலும்:
பூமணியின் வெக்கை நாவல்
பதினைந்து வயது சிறுவன் செய்யும் ஒரு வஞ்சின கொலைக்கு பிறகான ஏழு நாட்களாக விரியும் கதை.
இதற்குள்ளாக அந்நிலத்தின் விவரிப்புகள், உறவுகளின் பாசப் பிணைப்புக்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என ஒரு அழகிய உலகை படைத்து காட்டிருக்கிறார் பூமணி.
'அசுரன்' படத்தில் உள்ளதில் ஒரு சதவீத வன்முறை கூட இந்நாவலில் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். அத்திரைப்படம் ஒரு வகையில் உணர்ச்சியைத் தூண்டி 'அவன அடி! கொல்லு!!' என்று பார்வையாளர்களைச் சொல்ல வைப்பதாக இருக்கும். ஆனால் இந்நாவல் முடிவை நோக்கிச் செல்ல செல்ல மனம் ஒரு அலாதியான நிறைவை அடைகிறது. சிதம்பரம் கண்களின் வழியே நாம் காணும் அந்த நிலம் மிக ரம்மியமாகவும் நுட்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதை முழுக்க உள்வாங்கி spontaneousஆக செயல் படுபவனுக்கு அந்நிலம் வேண்டிய நேரத்தில் உணவும் நீரும் அளித்து பொத்தி பாதுகாக்கிறது. தாயை அறிந்த மகனுக்கு கிடைக்கும் சலுகைகள் போல.
150 பக்கமே உள்ள சிறிய நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஆழமும் தனித்துவமும் மிக்கதாய் உள்ளன.
சிதம்பரம் - அய்யா சிவசாமி - அம்மா - கொலை செய்யப்பட்ட அவனது அண்ணன் - அவனது தங்கை, அத்தை - மாமா - சானகி, சித்தி - சின்னய்யா - குட்டிபயல் என ஒரே நிலத்தின் வெவ்வேறு முகங்கள் போல உறவுகள் உள்ளன.
உறவைத்தாண்டி சிவசாமி ஜெயிலில் சந்திக்கும் இரு கொலை செய்த அய்யாயும் (இக்கதாபாத்திரத்தை வைத்து ஜெயமோகன் தனியே ஒரு சிறுகதை எழுதியுள்ளார் [குருதி]) பனையேறியும் சில வரிகளிலே மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள்.
பாத்திரங்கள் ஏதுமின்றி சோறு வைப்பது, விசிலடித்து ஆட்டு கிடை ஓட்டுவது, சாராயம் ஊறல் வைப்பது, வித விதமான பழங்களை கண்டறிந்து உண்பது, பாம்பு பிடிப்பது என வாசகன் மனதில் உள்ள சிறுவனை உற்சாகம் கொள்ள வைக்கும் பல சிறு சிறு தருணங்கள் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.
வெற்றிமாறன் ஒரு பேட்டியில் இந்த திரைப்படம் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது மொத்த கும்பமும் எப்படி அதிலிருந்து உறுதியோடு மீள்கிறார்கள் என்பதை இப்படம் என்றார்.
ஆனால் இந்நோக்கத்தை எட்டுவதில் படம் எந்தளவுக்கு வெற்றி பெற்றதென்பது சந்தேகமே. சிவசாமியை மையம் கொண்ட தீவிரமான வன்முறைகாட்சிகளில் கவனம் செலுத்தியதன் மூலம் அந்த குறியை தவற விட்டு விட்டதென்பதும் அதேநேரத்தில் ஒரு திரைப்படத்திற்குள் அந்த முழுமையை வெளிபடுத்துவது அறிதானதென்பதுமே உண்மை.
ஆனால் இந்நாவலின் மையச்சரடு நிச்சயமாக அதுதான். நிலத்தை அறிந்தவனுக்கு அந்நிலமும் அதன் முகங்களான மக்களும் எப்படி துணை நிற்கிறார்கள், ஒரு பிரச்சனையின் போது எப்படி ஒரு ஒன்றுபட்டு அதை எதிர்கொள்கிறார்கள் என்று ஒரு நிகர்வாழ்வு அனுபவம் போல் மனம் நிறைத்து வெளிப்படுத்திருக்கிறது இந்நாவல்.
Comments
Post a Comment