வெள்ளையானை - ஜெயமோகன் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான்...
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாள் மட்டுமே நீடித்து, மறுநாள் சுவடே இல்லாமல் துடைத்தழிக்கப்பட்ட அந்த போராட்டம் வரலாற்றில் மிகச் சிறு சலனம்தான். ஆனால், வரலாறு ஒரு கடல். ஆழத்தில் உறைந்திருக்கும் 'டெக்டானிக் ப்ளேட்'ன் சிறு சலனம் தான் ஆழிப்பேரலையாக எழுகிறது.
அப்படி அவர்களின் பிற்கால எழுச்சிகளுக்கு வழிவகுத்த முதற்கனல் தான் அந்த போராட்டம்.
ஏய்டன் - உங்கள் புனைவுலகின் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவன். அவன் அகம் முழுக்க ஐயர்லாந்தின் விரிந்த புல்வெளிகள் தான் நிறைந்துள்ளது. அப்புல்வெளிகளில் ஒரு கையில் வாளும் மறுக்கையில் குழலும் ஏந்தி நிற்கும் தேவதையாக (அல்லது சாத்தனாக) ஷெல்லி. அவனது அகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. கவிஞனாகவும் படைவீரனாகவும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறான். ஆம், பசும்புல்வெளியாகவும் நீலக்கடலாகவும்...
தனித்துவமான செவ்வியல் நடையில் அவனது அக கொந்தளிப்புகள் கூர்மையாகவும் உணர்ச்சிகரமாகவும் வெளிப்பட்டுள்ளது. ஏய்டன் கதாபாத்திரத்தின் இரு எல்லைகளாக மக்கின்ஸியும் ஆன்ட்ரூவும் உள்ளனர். ஒருவன் பிரிட்டிஷ் படையின் கச்சிதமான வார்ப்பு மற்றொருவன் துளியும் சஞ்சலம் இல்லாமல் கர்த்தரின் அணுக்கத்துக்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பவன்.
பஞ்ச சித்தரிப்புகள் எவர் மனதையும் உலுக்கக் கூடியவை. "தொர... தொர... " என்று உயிரின் கடைசி துளி வரை எரித்து மன்றாடும் உடல்கள். ஏய்டனின் அகமும் முழுக்க சமநிலை இழந்து போகிறது. அவ்வேளையில் எவ்வளவு படிமங்களும் காட்சிகளும் அவன் மனதுள் வந்து கொட்டுகின்றன. "ஆதாமின் கை விரலைத் தொடும் கடவுள்... அதிகார முற்றத்தில் உயிர் விடும் மக்கள்... மக்களை நசுக்கி, ரத்தத்தில் ஓடும் கடவுளின் ரதம்..." பித்து நிலைக்குத் தள்ளும் எழுத்து.
அதற்கு அடுத்த அத்தியாயமே, மதரஸாப்பட்டினத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுகிறது. வெள்ளை நகரில் ஜொலிக்கும் வைரங்களும் மின்னும் உடைகளும் கிறங்கடிக்கும் வாசனைகளுமாக வாழும் வெள்ளையர்கள், மேல் சாதி வியாபாரிகள்...
காத்தவராயன், ஜோசப் போன்ற கதாபாத்திரங்கள் சமூக நிலையைப்பற்றியும், பிரிட்டிஷ் சுரண்டல் பற்றியும் மிகுந்த தெளிவுள்ளவர்களாக வடிவமைக்கப் பட்டுள்ளனர். ஏய்டனே கூறுகிறான்
"ஒரு செவ்வியல் நாடகத்தின் தேர்ந்த கதாபாத்திரங்கள் போல்" என்று.
ஒன்பதாவது அத்தியாயம் ஒரு உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். முதல் எதிர்க்குரல் எழும் தருணத்தை உணர்ச்சிப் பொங்க எழுதியுள்ளீர்கள். ருஷ்ய புரட்சியை காட்சிப்படுத்திய "புது வெள்ளம்" சிறுகதையை விட பல மடங்கு சிறப்பானதாக இருந்தது.
"இந்தியாவின் சாதி அடுக்குகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் அதன் அடித்தளம் நெகிழ்வானது, அடுக்குகள் மாறக்கூடிவை. அது இறுக்கமாக ஆகியதற்குப் பிரிட்டிஷ் ஆட்சி முக்கிய காரணம்" என்பது புதிய கண்ணோட்டமாகவும் திறப்பாகவும் இருந்தது.
முழு நாவலும் ஏய்டனின் பார்வை வழியாகச் செல்வதால் இந்தியாவை, அதன் சமூகத்தை ஒரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியது போல் எவ்வித சமரசமும் இல்லாமல் சமூக அவலம் கூறப்படுகிறது. இந்நாவலின் நோக்கம் சமநிலை அல்ல, நோய்க்கட்டியினை சுட்டிக்காட்டுவதே என்று நினைக்கிறேன்.
அன்பு, கருணை போன்ற விழுமியங்கள் மக்களிடையே விதைக்க இயேசு தன் குருதியையே அளிக்க வேண்டியதாயிற்று, அதுபோல பஞ்சத்தாலும் பசியாலும் இறந்த பலலட்சம் மக்களின் குருதியே வெள்ளையர்களிடம் நீதியுணர்ச்சியை விதைத்தது. (அப்பஞ்சங்களை ஏற்படுத்தியதும் வெள்ளையர்களே என்பதுதான் வரலாற்றின் முரணியக்கம்.) ஏய்டன் இறுதியில் பருகுவதும் அதைத்தான்...
இலக்கியவாதிகளின் கைவிளக்கு வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களை நோக்கியே திரும்பி இருப்பது மானுடத்தின் நல்லூழ் என்றுதான் சொல்ல வேண்டும். நன்றி.
தங்கள்
கிஷோர் குமார்.
Comments
Post a Comment