May 21, 2020
வெண்முரசு - களிற்றியானை நிரை : சிறு குறிப்பு
உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்: சிறு குறிப்பு.
இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் : நாவலனுபவம்
விரியும் விதைகள் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
தினமும் கதைகள் வெளியாவதால் அவற்றிக்கு இடையே உள்ள தொடர்புகளை, பொதுத்தன்மைகளை தான் மனம் தானாக தேடுகிறது. அதுபோல, நேற்று இரவு ஒரு எண்ணம் தோன்றியது.
வெளியான கதைகளில் வரும் ஒயரால் கூடு கட்டும் குருவி(குருவி), மின் கம்பியில் விடபிடியாய் கிறங்கி கிடக்கும் மலைப்பாம்பு(லூப்), ஊருக்குள் நுழைந்து மனிதர்களோடு சேர்ந்து குடிக்கும் குரங்கு(இடம்), மலைச்சாலையில் டீசல் முகர்ந்து நிற்க்கும் யானைகள்(அங்கி) என்று வரும் விலங்குகள் மனித நவீன நாகரீகத்திற்குள் நுழைகின்றன. இப்பட்டியலில் வீட்டிற்குள் நுழையும் ‘ஆனையில்லா!’ யானையையும் சேர்க்கலாம்.
இவை ஏன் இங்கு வருகின்றன?கூடுகட்ட நார்கள் கிடைக்கவில்லையா குருவிக்கு? அவ்வளவு அழுத்தமாக, மின் கம்பியை விட்டு ஏன் செல்ல மறுக்கிறது அந்த மலைப்பாம்பு? ஊருக்குள் நுழைந்தத்திற்கு அந்த குரங்கு கூறும் காரணம் என்ன?
இவற்றில் பெரும்பாலானவற்றை (பாம்பு, குரங்கு) மனிதன் முதல் விலக்கவே பார்க்கிறான். பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்கிறான்.
அந்த விலங்குகள் தன் இனத்தின் இயல்பை மீறி வேறொன்றிக்குள் வருகின்றன. தங்களை Adapt செய்து கொள்கின்றன.ஒயரால் தன் கூட்டை கட்டிய குருவி நாளை அலைபேசி டவரில் தன் வீட்டை கட்டினாலும் கட்டும் போலும்!
“வாழ்வை சித்தரிப்பது அல்ல என் கதைகள், அவற்றின் அடிப்படையை ஆராய்வது” என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அவை மனித வாழ்வையும் கடந்ததாக எனக்கு படுகிறது. உங்கள் கதைகள் எண்ண எண்ண விரியும் விதைகளாக உள்ளது.
தங்கள்,
கிஷோர் குமார்.
திருச்சி.
மலைகளின் உரையாடல் [சிறுகதை] - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
மலைகளின் உரையாடல் [சிறுகதை]
‘மலைகளின் உரையாடல்’ வாசித்தேன். கதையின் களம் ‘குருவி’ சிறுகதையின் தொடர்ச்சியாக இருந்தாலும் இதன் கரு ‘விசும்பு’ கதையின் நீட்சியாக எனக்கு படுகிறது.
ஒரு சிறு பறவைக்கும் மற்ற உயிரினங்களுக்குமான தொடர்பை விசும்பு பேசுகிறது. (ஒரு பறவை இனத்தின் திசை மாற்றம், மற்ற பறவைகளின் திசையை பாதிக்கிறது, மீன்களும் திசை மாறி பயணிக்கிறன.)அறிவியலின் எல்லைகளையும் கூறுகிறது.
மலைகளின் உரையாடல் இயற்கையின் அஃறிணைகளுக்கு இடையேயான தொடர்பை கூறுகிறது. ஒரு குருவி கட்டிய கூட்டில் மனிதன் மின்சாரம் செலுத்தும் போது எவ்வித எதிர்வினைகளும் இல்லை. ஆனால் அக்கூடு வானின் மின்னைலுக்கு பதிலுரைகிறது. இடி முழக்கம், மலைகளுடன் உரையாடுகிறது. வான் மின்னல், குருவி கூட்டுடன் உரையாடுகிறது. இடியும் மின்னலும் மேகங்களின் உரையாடலில் பிறக்கிறது.
அக்குருவி கூட்டினை போலவே ஒரு மாபெரும் இயற்கையின் பின்னலை, ஒரு ஓயாத உரையாடலை இக்கதை உணர்ந்துகிறது.மிக அற்புதமான கதை.
ஒரு சிறுகதையை வாசித்து முடித்து பின்னர் அதன் தலைப்பை பார்ப்பது ஒரு அனுபவத்தை தரும். ஆனால் இக்கதையின் தலைப்பு ஒரு பெரும் விரிவை நோக்கி செல்லாமல் உள்ளதாக படுகிறது. விசும்பை போலவே கதை ஒரு பரந்த தரிசனத்தை கொடுத்தாலும், இதன் தலைப்பு ‘மலைகளுக்கு இடையேயான உரையாடலை’ மட்டும் குறிப்பிட்டு குறுகுகிறது. மறுவாசிப்புகளில் அதன் பிடி கிடைக்கலாம்.
தங்கள்,
கிஷோர் குமார்.
திருச்சி.
ஜெயமோகன் சிறுகதைகள் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky முதல் சுந்தரராமசாமி வரை.
ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது.
பிறகு, படிக்காமல் விட்ட மாயப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது. மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால் உலகம் நோக்கி விரியும் கதை. இரண்டுமே அற்புதமானவை.
வாசித்து முடித்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருச்சி மிகவும் வெப்பமான மாவட்டம். அதில் இந்த கோடை மழை ஒரு வரப்பிரசாதம். வான் சிற்றலை. பால்கணியில் அமர்ந்து உங்கள் கதைகளை மழையில் அசை போடும் அருமையான அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.
தங்கள்
கிஷோர் குமார்
***
அன்புள்ள கிஷோர்,
உண்மையில் ஒரு கதை இன்னொரு கதையை உருவாக்கும். இதை பெரும் படைப்பாளிகள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு கதைவழியாக ஓர் உயரத்திற்குச் சென்றபின் மேலும் மேலும் செல்லமுடியும். உலகின் சில ஆசிரியர்களின் மகத்தான கதைகள் ஓரிரு நாளில் தொடர்ந்து எழுதப்பட்டவை. குறிப்பாக பால்ஸாக் அப்படி நிறைய எழுதியிருக்கிறார். அது ஒரே வைரத்தை திருப்பித்திருப்பி முடிவில்லாது பார்த்துக்கொண்டிருப்பதுபோல
ஜெ
எழுகதிர் [சிறுகதை] - கடிதம்
எழுகதிர் [சிறுகதை]
அன்புள்ள ஜெயமோகன்,
எழுகதிர் ஒரு மாபெரும் கேன்வாஸில் நிகழும் கதை.
கதாநாயகனின் நண்பன் வழியாக கதை சொல்லப்படுவதால் ஒரு சிறுகதை வடிவத்தை அடைந்துள்ளது. ஸ்ரீ யின் பார்வையில் நிகழ்ந்தால் எத்தனை சாகசங்கள், எத்தனை ததள்ளிப்புகள், எத்தனை அழைகளைப்புகள். அது ஒரு நாவலின் களமாக விரிய கூடியது. ஸ்ரீ யின் பார்வையில் நினைக்கவே திகிலாக உள்ளது. {பின்தொடரும் நிழல் வீரபத்ரனை போல்!}
வாசிக்கும் போதே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முற்படும் போது கதையில் ஒரு திருப்பம் வருகிறது. ஸ்ரீ இடம் உள்ள அருண பிந்துவை பறித்து கொள்கிறார்கள், அது வெறும் கூழாங்கல்லாக உள்ளது(அர்ஜுனன் எடுத்த அஸ்வத்தாமனின் நுதல் மணி போல்). ஸ்ரீ யே அம்மணியாக மாறி கிழக்கே சென்று கொண்டே இருக்கிறான்.
கதையின் முடிவு ஒரு உச்சம். அவன் மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் என்று சென்று கொண்டே இருக்கிறான்.கிழக்கே அருணனை நோக்கி! (ஏழு எட்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகார்த்தாவில் தென்படுகிறான். ஒருவேளை அது இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்றாக இருக்குமோ??!!)
தங்கள்,
கிஷோர் குமார்.
ஏகம் [சிறுகதை] - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஏகம் [சிறுகதை]
ஏகம் ஒரு அழகான சிறுகதை. அதன் அளவு சிறியதாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவது. காரில் திருமணத்திற்கு செல்லும் ஒரு சிறு எழுத்தாளர் கூட்டத்தின் உரையாடலிலிருந்து கதை தொடங்குகிறது. ஜே.கே மீது அவர்களுக்கு ஒரு aversion உள்ளது. ‘கருத்துநிலை கதைகள்’ என்று கோபாலன் சொல்கிறான்.
அவர்கள் வேறொரு உலகில் வாழ்கிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு வரும் மக்களின் மனநிலை, உரையாடல் ஆகியவற்றை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஜே.கே – திருமணம் – பெருமாள் என இவர்கள் உரையாடல் நீடிக்கிறது.
இவர்கள் தான் புல்லாங்குழல் வாசிக்கும் மணியை சற்று நேரத்தில் கவனிக்கிறார்கள். சுற்றி உள்ள பொன்வண்டுகளுக்கும் பட்டுவேட்டிகளுக்கும் அவ்விசை ஒரு பொருட்டே அல்ல.
ஆனால் ஜே.கே வந்த உடனே அந்த இசையை அடையாளம் காண்கிறார். யானையின் வழித்தடம் உருவாகி , அனலென அமர்கிறார். ‘கருத்துநிலை எழுத்தாளரும்’ புல்லாங்குழல் இசைஞனும் சந்தித்து, உரையாடி, விடைபெருவது ஒரு கவித்துவ நிகழ்வு.
அந்நிகழ்வு கூட சுற்றியுள்ள கூட்டத்திற்கு புரிய வில்லை. வண்ணவிளக்குகள் ஒளிர்ந்த நகரத்தெரு. முட்டிமோதும் மனிதர்கள். மிதந்தலையும் முகங்கள். வண்டிகளின் கிரீச்சிடல்கள். முட்டல்கள்,மோதல்கள். ஒலித்திரள். காட்சித்திரள்.
இவற்றின் நடுவே ஒருசொல் இன்றி சென்றுகொண்டிருந்தது அவர்கள்தான், அந்த ஐந்து பேர்.
தங்கள்,
கிஷோர் குமார்.
வாசிப்பும் விமர்சனமும் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நலமா? விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு என் வாழ்த்துக்கள். அருளாளர் விருது பெறவுள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு ஜேஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்து முடித்தேன். மிக சிறந்த வாசிப்பாக அது அமைந்தது.
ஆல்பெர் காம்யுவை பற்றி அவர் மறைந்த பின்னர் நிகழும் இரங்கல் கூட்டத்தின் மூலமே பாலு அறிவான். அது போல நான் சுந்தர ராமசாமியை தங்கள் ‘நினைவின் நதியில்’ புத்தகத்தின் மூலமே அறிந்தேன். அதற்கு நன்றி கூற விழைகிறேன்.
நான் எனது வாசிப்பு அனுபவத்தை என் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளேன். அதன் சுட்டியை தங்களுக்கு இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். நன்றி.
தங்கள் அன்புள்ள,
கிஷோர் குமார்.
ஜே.ஜே: சில குறிப்புகள் – நாவலனுபவம்
அன்புள்ள கிஷோர்
நீங்கள் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி எழுதிய விமர்சனத்தை வாசித்தேன். இன்றைய சூழலில் அதை ஒரு இலக்கியச்சிபாரிசு என்றுதான் சொல்லமுடியும் இல்லையா? நான் வாசித்தேன், நன்றாக இருந்தது, நீங்களும் வாசிக்கலாம்- அவ்வளவே. ஆனால் விமர்சனம் என்பது வேறு. அதற்கான அளவுகோல்கள் சில உண்டு. ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். வாசித்துப்பாருங்கள்- வாசகர் கடிதமும் திறனாய்வும்
நீங்கள் எழுதியிருப்பது ரசனைக்குறிப்பு. ஒரு நூலைப்பற்றிய ரசனைக்குறிப்பை எழுதலாம். ஆனால் அது வாசகனுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றால் அதில் நீங்கள் அந்நூலில் எதை ரசித்தீர்கள் என்று மட்டும் சொன்னால்போதாது ஏன் ரசித்தீர்கள் என்று சொல்லவேண்டும். அதை வெவ்வேறு நூல்களுடன், சொந்த வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டால் அப்படிச் சொல்லமுடியும். ஒரு நல்ல ரசனைவிமர்சனம் என்பது அந்நூலில் இருந்து பெற்றுக்கொண்டதைச் சொல்வது மட்டுமே
இப்போது நூல்களைப்பற்றி சொல்பவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். இணையவெளி முழுக்க சினிமாக்களைப்பற்றிய பேச்சுக்கள்தான். சினிமாப்பேச்சுக்களிலேயே 1,நக்கல் நையாண்டி 2,புகழ்தல் புளகாங்கிதமடைதல் 3,அரசியலைக் கண்டடைதல் 4, கிசுகிசு என்னும் நான்கே பாணிகள்தான் உள்ளன. ஆகவே புத்தகம் பற்றி ஒருவர் எழுதுவதே மிக அரிய செயல். அதற்கு எதிர்வினைகள் மிகமிகக்குறைவாக மட்டுமே வரும். இருந்தாலும் எழுதப்படுவது இல்லாமலாகப்போவதில்லை. எழுதுவதை வாசிக்க சிலர் இருப்பார்காள். அவர்களைக் கருத்தில்கொண்டு நம்மால் முடிந்தவரை சிறப்பாகவே எழுதவேண்டும்
ஜே.ஜே.சிலகுறிப்புகளுக்கு வருவோம். அந்நாவலை படித்தேன், நன்றாக இருந்தது என்னும் செய்திக்கு அப்பால் அதில் என்னென்ன சொல்லப்படலாம்? நீங்கள் ஓர் இலக்கிய விற்பன்னரோ, விமர்சகரோ அல்ல என்ற அடிப்படையில், ஒரு வாசகர் மட்டுமே என்னும் அடிப்படையில் சொல்கிறேன்.
முதல் பேசுபொருள் அதன் வேறுபட்ட வடிவம், இல்லையா? அந்த வடிவம் நாவலுக்குரியதாக நாம் நம்பியிருக்கும் நேர்ச்சித்தரிப்பு அல்ல. அது ஒரு வாழ்க்கைவரலாறு போல இருக்கிறது. ஒர் எழுத்தாளனின் நாட்குறிப்பு, அந்த எழுத்தாளனை தேடிச்சென்று அந்த நாட்குறிப்பை கண்டையும் அவனுடைய அடுத்த தலைமுறை எழுத்தாளனின் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவை அடங்கியது அந்த நாவல்.
வாசகனாக உங்கள் முன் இருக்கும் முதற்கேள்வி, இந்த வகையான வடிவம் உங்களுக்கு எதை அளித்தது? இது கற்பனை அல்ல,உண்மையான ஓர் எழுத்தாளனைப் பற்றிய குறிப்புகள் என்னும் நம்பிக்கையை உருவாக்கியதா? ஒழுக்குள்ள வாழ்க்கைச்சித்தரிப்புக்குப் பதிலாக இப்படி இருப்பது உங்களுக்கு நாவலின் வாழ்க்கையையும் கதைமாந்தரையும் கற்பனை செய்துகொள்ள தடையாக அமைந்ததா? அல்லது, அது கூடுதலாக உதவியதா? நீங்கள் அந்த வடிவத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது ஒரு வாழ்க்கை வரலாறு என தன்னை முன்வைக்கும் வடிவம் கொண்டிருக்கிறது. நீங்கள் வாசித்த மெய்யான வாழ்க்கை வரலாறுகளிடமிருந்து அது எப்படி வேறுபடுகிறது? எப்படி ஒத்துப்போகிறது? அவற்றில் உள்ள எது இதில் இல்லை? அவற்றில் உள்ள எந்த அம்சம் இதில் புனைவாக சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது?
இந்நாவலில் கதாபாத்திரங்கள் எல்லாமே குறிப்புகளாகவே தரப்பட்டுள்ளன. கதைசொல்லியான பாலுவால் சிறிது நையாண்டியுடன் கூறப்பட்டுள்ளன அவை, இல்லையா? அதாவது ஒரு ‘கார்ட்டூன்’ தன்மை இவற்றில் உள்ளது. உதாரணம் என்.இக்கண்டன் நாயர், முல்லக்கல் மாதவன் நாயர் , சிட்டுக்குருவி போன்றவர்கள். இப்படி கதாபாத்திரங்கள் கார்ட்டூன்களாக வருவது உங்களுக்கு பிடித்திருந்ததா இல்லையா, ஏன்? இப்படி வருவதன் வழியாக அக்கதாபாத்திரங்கள் இந்நாவலில் எந்த இடத்தை ஆற்றுகிறார்கள்?
இனி அதன் உள்ளடக்கம். இது ஓர் எழுத்தாளனின் வாழ்க்கை. அவன் தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்டவன் என்கிறான் பாலு. ஜே.ஜே. பற்றி அப்படித் தோன்றுகிறதா? அந்த உள்ளொளி வெளிப்படும் இடங்கள் என்ன? அவனுடன் எந்த எழுத்தாளரை ஒப்பிட்டுக்கொள்வீர்கள் [உதாரணமாக அவனுடன் புதுமைப்பித்தனை எளிதில் ஒப்பிடலாம்] இவர்களின் இந்த வகையான வாழ்க்கை, இவர்களின் தேடல் உங்களுக்கு எவ்வகையில் பொருட்படுகிறது.
என்உளப்பதிவைச் சொல்கிறேன். இவர்களுக்கு மதம், மரபு இரண்டைப்பற்றியும் ஆர்வமும் விமர்சனமும் உள்ளது. இவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் மறுத்து தனக்கான உண்மைகளை தாங்களே தேடி அடைய முயல்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் வாழ்க்கையை ஒரு கருவியாகக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவர்களின் வாழ்க்கை பற்றி பாலு [அல்லது சு.ரா] சொல்வது மிகமிகச் சாதாரணமாக உள்ளது.
உதாரணமாக, ஜே.ஜே.சுதந்திரப்போரில் ஈடுபடவில்லை. எந்தவகையான வாழ்க்கைச்சிக்கல்களையும் நேரடியாக எதிர்கொள்ளவில்லை. சேவை செய்யவில்லை. போராடவில்லை. பயணம் செய்யவில்லை. அலைந்து திரியவில்லை. வெறுமே யோசிக்கிறான். ‘நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்கிறான். இப்படி யோசித்து வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்ள முடியுமா?.வைக்கம் முகமது பஷீர் மேலே சொன்ன அனைத்தையும் செய்தவர். சிவராம காரந்தும் அப்படிப்பட்டவர். ஆனால் புதுமைப்பித்தன் அப்படி அல்ல. உங்கள் தரப்பு என்ன? எது எழுத்தாளனின் வழி?
ஜே.ஜே. எங்குமே கேரள வரலாறு, கேரளப் பண்பாடு பற்றிய ஆர்வத்தையே வெளிப்படுத்தவில்லை. கேரளத்தின் மரபிலக்கியம் பற்றிய எந்தக்குறிப்பும் ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இல்லை. அவனுடைய ஆர்வம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியம் மீதே உள்ளது. இப்படி இருந்த , இருக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர்.
இப்படி இருக்கும் ஜே.ஜே. அந்தக்காலகட்டத்தின் எழுத்தாளர்களின் ஒரு மாதிரிவடிவம் – ஓர் உதாரணம். அந்தக்காலகட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்று பார்க்கையில் அந்தச் சிந்தனையாளர்கள்மேல் நெருக்கம் உருவாகிறதா? இல்லை விலக்கமா? இரண்டுக்கும் அடிப்படையான காரணங்கள் என்னென்ன?
இன்னும் அந்நாவலில் செல்லும் தொலைவுகள் பல. ஜே.ஜே. நிலையில்லாமல் இருப்பவன். ஆனால் அவன் அருகே இரண்டு கதைமாந்தர் நிலைகொண்ட மனிதர்கள். ஒருவர் எம்.கே.அய்யப்பன். இன்னொருவர் சம்பத். இருவரும் இருவகையில் உறுதியானவர்கள். ஜே.ஜேயை அவர்களுடன் ஒப்பிடுங்கள். அது அவனை எப்படி காட்டுகிறது என்று பாருங்கள்
இப்படி பல கோணங்களை திறக்கலாம். பாலுவுக்கு ஏன் ஜே.ஜே மேல் அந்த ஈடுபாடு? பாலு கட்டுப்பெட்டியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நோயாளி. ஜே.ஜே உழைப்பாளியான அடித்தளக் குடும்பத்தில் பிறந்த கால்பந்தாட்டக்காரன். ஆரோக்கியமானவன். இந்த வேறுபாடுதான் அந்தக் கவற்சியா? பாலு மீறிச்செல்ல கனவு காண்பவன். அக்கனவுதான் ஜே.ஜேயாக கண்முன் தெரிகிறதா? அவர்களூக்கிடையே உள்ள உறவு என்ன?.
இப்படியே உங்கள் வாசிப்பை பெருக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை சார்ந்து விரிவாக அதனிடம் வினாக்களை எழுப்பி உரையாடுங்கள். அந்நாவல் அளிக்கும் எல்லா குறிப்புகளையும் அதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்நாவலின் வடிவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி அவ்வடிவம் அவ்வாறு விரிவான வாசிப்புக்கு உதவுகிறதா என்று பாருங்கள். அந்நாவல் முன்வைக்கும் மையமான வாழ்க்கைப்பார்வை உங்கள் அளவில் எப்படி பொருள்படுகிறது என்று பாருங்கள். அவ்வாறு நோக்கி குறிப்புகளை எடுத்தபின் அதை ஒட்டுமொத்தமாக ஒரு கட்டுரையாக ஆக்குங்கள்
இத்தகைய கட்டுரைகள் ஏன் முக்கியம் என்றால் இப்படி எழுதப்படும் ஒரு கட்டுரை இன்னொரு கட்டுரையை இன்னொருவர் எழுத தூண்டுதலாகிறது என்பதனால்தான். அவ்வாறுதான் இலக்கியம் பற்றிய உரையாடல் உருவாகிறது. இலக்கியம் பற்றிய ஆழமான உரையாடலே இலக்கியவாதிக்கு நாம் செய்யும் வணக்கம்
ஜெ
29-01-2020
திருச்சி இலக்கியம் கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்கள் கடிதம் கிடைத்தது. நலமுடன் இருக்கிறேன். தாங்கள் அடையாளம் கண்டுகொண்டு நலம் விசாரித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நன்றி.
தாங்கள் கூறியபடி ஒரு படைப்பு தரும் அனுபவத்தை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
நான் திருச்சியில் வசிப்பவன். இங்கு இலக்கிய, வாசிப்பு குழுக்கள் ஏதேனும் உள்ளதா? இருந்தால் தெரிவிக்கவும். ஏனென்றால் இலக்கியம் சார்ந்து உரையாட எனக்கு யாரும் இல்லை. கடிதம் மூலம் தங்களுக்கு எழுதுவதோடு சரி.
நன்றி.
தங்கள்,
கிஷோர் குமார்
***
அன்புள்ள கிஷோர்குமார்
திருச்சியில் வாசகசாலை போன்ற அமைப்புக்கள் கூட்டங்கள் நடத்துகின்றன என நினைக்கிறேன். திருச்சியில் நடக்கும் கூட்டங்களை சில அரைவேக்காட்டு ஆசாமிகள் நடக்கவிடாமல் பேசிக்குலைக்கும் செய்திகள்தான் வருகின்றனவே ஒழிய அங்கே உருப்படியாக ஒரு கூட்டம் நடந்ததாக நான் சென்ற பல ஆண்டுகளில் கேள்விப்பட்டதில்லை. ஒருவேளை அதனாலேயே பலரும் சோர்ந்து ஒதுங்கிக்கொண்டிருக்கலாம்
ஜெ
***
05-09-2019
விஷ்ணுபுரம் - நாவலனுபவம் - கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
விஷ்ணுபுரம் வாசித்த பின்னர் ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.
விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது.
இப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய் உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது.
முதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘ஊட்டுபுரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள்! விஷ்ணுபுரத்தில் வரும் எந்த பிரிவினரையும் உங்கள் பகடி விட்டுவைக்கவில்லை.
ஸ்ரீபாதம் பகுதியில் வரும் கதாபாத்திரங்களை கூர்ந்து வாசித்து வந்ததால் ‘மணிமுடி’ மிகவும் அருமையாக சென்றது. அதேசமயம், பல கதாபாத்திரங்களின் ‘character arc’ வியப்பளித்தது. ஆனாலும் ‘மணிமுடி’ பகுதியை என்னால் வேகமாக வாசிக்க இயலவில்லை அது பல தடைகள் போட்டு சிகரத்திலிருந்து சமவெளியை நோக்கி தள்ளியது.
‘Silicon Shelf’ பக்கத்தில் வந்த நீண்ட கட்டுரையை இந்த நாவல் படிக்கும் முன்னே படித்து “யப்பா! எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க!” என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போது இன்னும் அதுபோல் நூறு பக்கங்கள் எழுதினாலும் “விஷ்ணுபுற விளைவை” விளக்குவது எளிதல்ல என்று புரிகிறது.
இதன் கதாபாத்திர வடிவமைப்புகளை பற்றி மட்டும் தனியாக ஒரு கடிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
இனி வரலாறு சம்மந்தப்பட்ட எதனை வாசித்தாலும் விஷ்ணுபுரமும் அதனுள் சஞ்சரித்தவர்களின் நினைவுகளே வரும்!
இது புரை நீக்கிய தெளிந்த கண்களா அல்ல, கண்ணாடி மாட்டிய புதிய கண்களா? என்று தெரியவில்லை.
நன்றி.
இப்படிக்கு,
கிஷோர் குமார்.
18-05-2019
விஷ்ணுபுரம் - கொந்தளிப்பு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது. எத்தனை விதமான கதாப்பாத்திரங்கள். அனைவரையும், அனைத்தினையும் விஷ்ணுபுரம் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நான் மிகவும் ஆரம்ப நிலை வாசகன், எண்ணெய்யே விஷ்ணுபுரத்தின் கணவுநிலையும் அதன் கட்டற்ற தன்மையும் ஈர்த்து கவர்கிறது என்றால் தேர்ந்த வாசகர்களை எவ்வளவு படுத்தி இருக்கும். உங்களுக்கு வந்த விஷ்ணுபுரம் கடிதங்களை வாசித்தாலே அவர்களின் தவிப்பு புரிகிறது. விஷ்ணுபுரத்தை முழுவதும் வாசித்த பின்னர் உங்களுக்கு நீண்ட கடிதம் எழுத விரும்புகிறேன்.
மேலும் உங்கள் பதிவுகள் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றன ஒரு ஆற்றாமையை, கையலாக நினைப்பை ஏற்படுத்துகின்றன. என்னதான் வேண்டும் ஸ்வாமி நிகமானந்தவிற்கு, எது மாத்ரி சதன் துறவிகளை முன்செலுத்துகிறது. நன்றாக வாழ வேண்டியது தானே.
நான் மிகவும் சுயநலமானவன் என்னை தவிர எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. காந்தி, அண்ணா ஹசாரே, நிகமானந்தா பற்றி உங்கள் பிதிவுகளை படிக்கும் போது மனம் வெதும்புகிறது, கொந்தளிக்கிறது.
நான் அசல் வாசகனா, போலி வாசகனா, இது வெறும் சில நேர கிளர்ச்சியா என்று அறிய முடியவில்லை.
என் மனதை கலைத்து தெளிய வைக்கும் உங்களுக்கு நன்றிகள் தவிர வேறு ஏதும் சொல்லவும் தெரியவில்லை.
நன்றி.
இப்படிக்கு
கிஷோர் குமார்
அன்புள்ள கிஷோர்குமார்
அழகு, இலட்சியவாதம், ஆன்மிக தரிசனம் ஆகியவை ஒருவகை அலைக்கழிப்பாகவே நம்முள் நுழையும். எந்த ஒரு கலைவடிவை முதலில் அறிமுகம் செய்துகொண்டாலும் ஏற்படுவது கொந்தளிப்புதான். அந்தக்கொந்தளிப்பு மேலோட்டமானது. அது நம் ஆழத்தில் ஓரு மாற்றம் உருவாவதன் விளைவு. கண்டதட்டுகள் நிலைமாறும்போது பூகம்பம் உருவாவதுபோல. ஆழத்திலுள்ளது மிகச்சிறிய, ஆனால் மிக அடிப்படையான மாற்றம்.
அந்த கொந்தளிப்பை மிகையாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு தற்காலிக நிலை மட்டுமே. மெல்லமெல்ல அது இல்லாமலாகும். நம்முள் நிகழ்ந்த மாற்றத்தை மட்டும் கவனியுங்கள். அந்த மாற்றம் நம் வாழ்விலும் நிகழ்வதற்குத் தடையாக உள்ளது என்ன என்று நோக்குங்கள். அதுவே நம்மை மாற்றத்தொடங்கும்
அவ்வாறு நாம் நம்மை கூர்ந்து நோக்கி நம் வாழ்க்கையை அவ்வண்ணம் அமைக்காவிட்டால் இந்தக் கொந்தளிப்பு ஓய்ந்ததும் நாம் மெல்லமெல்ல மீண்டும் நமக்கு வசதியான இடத்துக்கே சென்றுவிடவும் கூடும். இந்தக்கொந்தளிப்பை ஒருவகை கடந்தகால ஏக்கமாக மட்டும் நினைவுகூர்வோம்
ஜெ
முதல் கடிதம்
வணக்கம் ஐயா,
நான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக!” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன்.
எப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எனக்கு இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், உங்கள் மொழியின் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கின்றது, குறிப்பாக “அறம்” சிறுகதை தொகுப்பு என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்கு ஒரு பாதிரியாரை பார்த்தாலும் “Fr.Dr.Sommervell”ன் ஞாபகமும், உணவு விடுதியில் யாராவது ஒரு பெரியவரை கண்டால் “சாகிப்பு” அவர்களின் ஞாபகமும் தான் வருகிறது.
அதன் பின்னர் உங்கள் “இரவு” நாவலை வாசித்தேன் இருட்டை பற்றிய ஒரு புதிய பார்வையை எனக்கு தந்தது அந்த நாவல்.
தற்போது “நீர்கூடல் நகர்” பதிவை படித்து முடித்து “இந்திய பயணம்” நூலை வாங்கியுள்ளேன். திருட்டுத் தனமாக “PDF” நூல்களை தரவிறக்கம் செய்வது தான் என் வழக்கம் அதைபோல் உங்கள் “விஷ்ணுபுரம்” நாவலையும் தரவிறக்கி வாசித்தேன் அதன் முன்னுரையை படித்தவுடனே அதை “Delete” செய்துவிட்டேன். விஷ்ணுபுரத்திர்கான உங்கள் உழைப்பு எனக்கு புரிந்தது.
எனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், நீங்கள் மிகவும் “conscious”ஆனவர் என்று உங்கள் பதிவுகளை படித்தால் தெரிகிறதுஆனால், உங்கள் சிறுகதைகள், நாவல்களை படித்தால் “இதை ஒரு சாதாரண மனிதன்” எழுதியதாக கருதமுடியவில்லை, ஒரு பிறழ்ந்த மனநிலையை என்னால் உணர முடிகின்றது குறிப்பாக உங்கள் “திசைகளின் நடுவே” சிறுகதை தொகுப்பில் இதை நான் உணர்ந்தேன்.
அது எப்படி உங்களால் இரு மனநிலைகளின் இடையே சஞ்சாரம் செய்ய முடிகின்றது?
“விடுப்பு விண்ணப்பங்களை தவிர இவன் எழுதும் முதல் கடிதம் இது” என்று நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். ஆம், அது தான் உண்மை.
இன்னும் நிறைய பேசவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் எழுத முடியவில்லை….
இப்படிக்கு,
கிஷோர் குமார்
--------------------------------------------------------------------------------------------
அன்புள்ள கிஷோர்குமார்
வாசிப்பில் நுழைவது ஓர் அரிய அனுபவம். அப்போதிருக்கும் பரவசமும் கொந்தளிப்பும் பின்னர் அமைவதே இல்லை. அப்போது சிலசமயம் அதன் அருமை தெரிவதில்லை. பின்னர் நாம் மனநெகிழ்வோடு நினைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள்.
இலக்கியப்படைப்புக்கள் ஒருவகை கனவுகள். மொழிவழியாக திட்டமிட்டு உருவாக்கிக்கொள்ளும் கனவுகள் என்று சொல்லலாம். கனவுகளுக்குரிய தன்னிச்சையான கட்டற்ற தன்மை எல்லா நல்ல படைப்புகளுக்கும் இருக்கும். அவை சிலசமயம் ஒழுங்கானவை. சிலசமயம் சிதைந்துகிடப்பவை. எல்லா தருணங்களிலும் எழுதியவனுக்கே புதிதாக இருப்பவை.
நாங்கள் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வருக. அங்கே பேசிக்கொள்ளலாம்.
ஜெ
-
தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போ...
-
An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன். ---------------------
-
எமர்சனின் இயற்கையை அறிதல் (தமிழில்: ஜெயமோகன்) பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்த...