விஷ்ணுபுரம் - நாவலனுபவம் - கடிதம்

Vishnupuram (Tamil) eBook: ஜெயமோகன், Jeyamohan: Amazon.in ...

அன்புள்ள ஜெயமோகன்,

விஷ்ணுபுரம் வாசித்த பின்னர்  ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.

விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது.

இப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய்  உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது.

முதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘ஊட்டுபுரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள்! விஷ்ணுபுரத்தில் வரும் எந்த பிரிவினரையும் உங்கள் பகடி விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீபாதம் பகுதியில் வரும் கதாபாத்திரங்களை கூர்ந்து வாசித்து வந்ததால் ‘மணிமுடி’ மிகவும் அருமையாக சென்றது. அதேசமயம், பல கதாபாத்திரங்களின் ‘character arc’ வியப்பளித்தது. ஆனாலும் ‘மணிமுடி’ பகுதியை என்னால் வேகமாக வாசிக்க இயலவில்லை அது பல தடைகள் போட்டு சிகரத்திலிருந்து சமவெளியை நோக்கி தள்ளியது.

‘Silicon Shelf’ பக்கத்தில் வந்த நீண்ட கட்டுரையை இந்த நாவல் படிக்கும் முன்னே படித்து “யப்பா! எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க!” என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போது இன்னும் அதுபோல் நூறு பக்கங்கள் எழுதினாலும் “விஷ்ணுபுற விளைவை” விளக்குவது எளிதல்ல என்று புரிகிறது.

இதன் கதாபாத்திர வடிவமைப்புகளை பற்றி மட்டும் தனியாக ஒரு கடிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

இனி வரலாறு சம்மந்தப்பட்ட எதனை வாசித்தாலும் விஷ்ணுபுரமும் அதனுள் சஞ்சரித்தவர்களின் நினைவுகளே வரும்!

இது புரை நீக்கிய தெளிந்த கண்களா அல்ல, கண்ணாடி மாட்டிய புதிய கண்களா? என்று தெரியவில்லை. 

நன்றி.

இப்படிக்கு,

கிஷோர் குமார்.

18-05-2019

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

இயற்கையை அறிதல் - எமர்சன்