வாசிப்பும் விமர்சனமும் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். நலமா? விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு என் வாழ்த்துக்கள். அருளாளர் விருது பெறவுள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து தங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு ஜேஜே: சில குறிப்புகள் நாவலை வாசித்து முடித்தேன். மிக சிறந்த வாசிப்பாக அது அமைந்தது.

ஆல்பெர் காம்யுவை பற்றி அவர் மறைந்த பின்னர் நிகழும் இரங்கல் கூட்டத்தின் மூலமே பாலு  அறிவான். அது போல நான் சுந்தர ராமசாமியை தங்கள் ‘நினைவின் நதியில்’ புத்தகத்தின் மூலமே அறிந்தேன். அதற்கு நன்றி கூற விழைகிறேன்.

நான் எனது வாசிப்பு அனுபவத்தை என் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளேன். அதன் சுட்டியை தங்களுக்கு இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். நன்றி.

தங்கள் அன்புள்ள,

கிஷோர் குமார்.

 

ஜே.ஜே: சில குறிப்புகள் – நாவலனுபவம்

அன்புள்ள கிஷோர்

நீங்கள் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றி எழுதிய விமர்சனத்தை வாசித்தேன். இன்றைய சூழலில் அதை ஒரு இலக்கியச்சிபாரிசு என்றுதான் சொல்லமுடியும் இல்லையா? நான் வாசித்தேன், நன்றாக இருந்தது, நீங்களும் வாசிக்கலாம்- அவ்வளவே. ஆனால் விமர்சனம் என்பது வேறு. அதற்கான அளவுகோல்கள் சில உண்டு. ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். வாசித்துப்பாருங்கள்- வாசகர் கடிதமும் திறனாய்வும்

நீங்கள் எழுதியிருப்பது ரசனைக்குறிப்பு. ஒரு நூலைப்பற்றிய ரசனைக்குறிப்பை எழுதலாம். ஆனால் அது வாசகனுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றால் அதில் நீங்கள் அந்நூலில் எதை ரசித்தீர்கள் என்று மட்டும் சொன்னால்போதாது ஏன் ரசித்தீர்கள் என்று சொல்லவேண்டும். அதை வெவ்வேறு நூல்களுடன், சொந்த வாழ்க்கை அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டால் அப்படிச் சொல்லமுடியும். ஒரு நல்ல ரசனைவிமர்சனம் என்பது அந்நூலில் இருந்து பெற்றுக்கொண்டதைச் சொல்வது மட்டுமே

இப்போது நூல்களைப்பற்றி சொல்பவர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். இணையவெளி முழுக்க சினிமாக்களைப்பற்றிய பேச்சுக்கள்தான். சினிமாப்பேச்சுக்களிலேயே 1,நக்கல் நையாண்டி 2,புகழ்தல் புளகாங்கிதமடைதல் 3,அரசியலைக் கண்டடைதல் 4, கிசுகிசு என்னும்  நான்கே பாணிகள்தான் உள்ளன. ஆகவே புத்தகம் பற்றி ஒருவர் எழுதுவதே மிக அரிய செயல். அதற்கு எதிர்வினைகள் மிகமிகக்குறைவாக மட்டுமே வரும். இருந்தாலும் எழுதப்படுவது இல்லாமலாகப்போவதில்லை. எழுதுவதை வாசிக்க சிலர் இருப்பார்காள். அவர்களைக் கருத்தில்கொண்டு நம்மால் முடிந்தவரை சிறப்பாகவே எழுதவேண்டும்

ஜே.ஜே.சிலகுறிப்புகளுக்கு வருவோம். அந்நாவலை படித்தேன், நன்றாக இருந்தது என்னும் செய்திக்கு அப்பால் அதில் என்னென்ன சொல்லப்படலாம்? நீங்கள் ஓர் இலக்கிய விற்பன்னரோ, விமர்சகரோ அல்ல என்ற அடிப்படையில், ஒரு வாசகர் மட்டுமே என்னும் அடிப்படையில் சொல்கிறேன்.

முதல் பேசுபொருள் அதன் வேறுபட்ட வடிவம், இல்லையா? அந்த வடிவம் நாவலுக்குரியதாக நாம் நம்பியிருக்கும் நேர்ச்சித்தரிப்பு அல்ல. அது ஒரு வாழ்க்கைவரலாறு போல இருக்கிறது. ஒர் எழுத்தாளனின் நாட்குறிப்பு, அந்த எழுத்தாளனை தேடிச்சென்று அந்த நாட்குறிப்பை கண்டையும் அவனுடைய அடுத்த தலைமுறை எழுத்தாளனின் வாழ்க்கைக்குறிப்பு ஆகியவை அடங்கியது அந்த நாவல்.

வாசகனாக உங்கள் முன் இருக்கும் முதற்கேள்வி, இந்த வகையான வடிவம் உங்களுக்கு எதை அளித்தது? இது கற்பனை அல்ல,உண்மையான ஓர் எழுத்தாளனைப் பற்றிய குறிப்புகள் என்னும் நம்பிக்கையை உருவாக்கியதா? ஒழுக்குள்ள வாழ்க்கைச்சித்தரிப்புக்குப் பதிலாக இப்படி இருப்பது உங்களுக்கு நாவலின் வாழ்க்கையையும் கதைமாந்தரையும் கற்பனை செய்துகொள்ள தடையாக அமைந்ததா? அல்லது, அது கூடுதலாக உதவியதா? நீங்கள் அந்த வடிவத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அது ஒரு வாழ்க்கை வரலாறு என தன்னை முன்வைக்கும் வடிவம் கொண்டிருக்கிறது. நீங்கள் வாசித்த மெய்யான வாழ்க்கை வரலாறுகளிடமிருந்து அது எப்படி வேறுபடுகிறது? எப்படி ஒத்துப்போகிறது? அவற்றில் உள்ள எது இதில் இல்லை? அவற்றில் உள்ள எந்த அம்சம் இதில் புனைவாக சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது?

இந்நாவலில் கதாபாத்திரங்கள் எல்லாமே குறிப்புகளாகவே தரப்பட்டுள்ளன. கதைசொல்லியான பாலுவால் சிறிது நையாண்டியுடன் கூறப்பட்டுள்ளன அவை, இல்லையா? அதாவது ஒரு ‘கார்ட்டூன்’ தன்மை இவற்றில் உள்ளது. உதாரணம் என்.இக்கண்டன் நாயர், முல்லக்கல் மாதவன் நாயர் , சிட்டுக்குருவி போன்றவர்கள். இப்படி கதாபாத்திரங்கள் கார்ட்டூன்களாக வருவது உங்களுக்கு பிடித்திருந்ததா இல்லையா, ஏன்? இப்படி வருவதன் வழியாக அக்கதாபாத்திரங்கள் இந்நாவலில் எந்த இடத்தை ஆற்றுகிறார்கள்?

இனி அதன் உள்ளடக்கம். இது ஓர் எழுத்தாளனின் வாழ்க்கை. அவன் தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்டவன் என்கிறான் பாலு. ஜே.ஜே. பற்றி அப்படித் தோன்றுகிறதா? அந்த உள்ளொளி வெளிப்படும் இடங்கள் என்ன? அவனுடன் எந்த எழுத்தாளரை ஒப்பிட்டுக்கொள்வீர்கள் [உதாரணமாக அவனுடன் புதுமைப்பித்தனை எளிதில் ஒப்பிடலாம்] இவர்களின் இந்த வகையான வாழ்க்கை, இவர்களின் தேடல் உங்களுக்கு எவ்வகையில் பொருட்படுகிறது.

என்உளப்பதிவைச் சொல்கிறேன். இவர்களுக்கு மதம், மரபு இரண்டைப்பற்றியும் ஆர்வமும் விமர்சனமும் உள்ளது. இவர்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட அனைத்தையும் மறுத்து தனக்கான உண்மைகளை தாங்களே தேடி அடைய முயல்கிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் வாழ்க்கையை ஒரு கருவியாகக் கொள்ளவில்லை. ஏனென்றால் இவர்களின் வாழ்க்கை பற்றி பாலு [அல்லது சு.ரா] சொல்வது மிகமிகச் சாதாரணமாக உள்ளது.

உதாரணமாக, ஜே.ஜே.சுதந்திரப்போரில் ஈடுபடவில்லை. எந்தவகையான வாழ்க்கைச்சிக்கல்களையும் நேரடியாக எதிர்கொள்ளவில்லை. சேவை செய்யவில்லை. போராடவில்லை. பயணம் செய்யவில்லை. அலைந்து திரியவில்லை. வெறுமே யோசிக்கிறான். ‘நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்கிறான். இப்படி யோசித்து வாழ்க்கையைப்பற்றி அறிந்துகொள்ள முடியுமா?.வைக்கம் முகமது பஷீர் மேலே சொன்ன அனைத்தையும் செய்தவர். சிவராம காரந்தும் அப்படிப்பட்டவர். ஆனால் புதுமைப்பித்தன் அப்படி அல்ல. உங்கள் தரப்பு என்ன? எது எழுத்தாளனின் வழி?

ஜே.ஜே. எங்குமே கேரள வரலாறு, கேரளப் பண்பாடு பற்றிய ஆர்வத்தையே வெளிப்படுத்தவில்லை. கேரளத்தின் மரபிலக்கியம் பற்றிய எந்தக்குறிப்பும் ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இல்லை. அவனுடைய ஆர்வம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியம் மீதே உள்ளது. இப்படி இருந்த , இருக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர்.

இப்படி இருக்கும் ஜே.ஜே. அந்தக்காலகட்டத்தின் எழுத்தாளர்களின் ஒரு மாதிரிவடிவம் – ஓர் உதாரணம். அந்தக்காலகட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்று பார்க்கையில் அந்தச் சிந்தனையாளர்கள்மேல் நெருக்கம் உருவாகிறதா? இல்லை விலக்கமா? இரண்டுக்கும் அடிப்படையான காரணங்கள் என்னென்ன?

இன்னும் அந்நாவலில் செல்லும் தொலைவுகள் பல. ஜே.ஜே. நிலையில்லாமல் இருப்பவன். ஆனால் அவன் அருகே இரண்டு கதைமாந்தர் நிலைகொண்ட மனிதர்கள். ஒருவர் எம்.கே.அய்யப்பன். இன்னொருவர் சம்பத். இருவரும் இருவகையில் உறுதியானவர்கள். ஜே.ஜேயை அவர்களுடன் ஒப்பிடுங்கள். அது அவனை எப்படி காட்டுகிறது என்று பாருங்கள்

இப்படி பல கோணங்களை திறக்கலாம். பாலுவுக்கு ஏன் ஜே.ஜே மேல் அந்த ஈடுபாடு? பாலு கட்டுப்பெட்டியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த நோயாளி. ஜே.ஜே  உழைப்பாளியான அடித்தளக் குடும்பத்தில் பிறந்த கால்பந்தாட்டக்காரன். ஆரோக்கியமானவன். இந்த வேறுபாடுதான் அந்தக் கவற்சியா? பாலு மீறிச்செல்ல கனவு காண்பவன். அக்கனவுதான் ஜே.ஜேயாக கண்முன் தெரிகிறதா? அவர்களூக்கிடையே உள்ள உறவு என்ன?.

இப்படியே உங்கள் வாசிப்பை பெருக்கிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை சார்ந்து விரிவாக அதனிடம் வினாக்களை எழுப்பி உரையாடுங்கள். அந்நாவல் அளிக்கும் எல்லா குறிப்புகளையும் அதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்நாவலின் வடிவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி அவ்வடிவம் அவ்வாறு விரிவான வாசிப்புக்கு உதவுகிறதா என்று பாருங்கள். அந்நாவல் முன்வைக்கும் மையமான வாழ்க்கைப்பார்வை உங்கள் அளவில் எப்படி பொருள்படுகிறது என்று பாருங்கள். அவ்வாறு நோக்கி குறிப்புகளை எடுத்தபின் அதை ஒட்டுமொத்தமாக ஒரு கட்டுரையாக ஆக்குங்கள்

இத்தகைய கட்டுரைகள் ஏன் முக்கியம் என்றால் இப்படி எழுதப்படும் ஒரு கட்டுரை இன்னொரு கட்டுரையை இன்னொருவர் எழுத தூண்டுதலாகிறது என்பதனால்தான். அவ்வாறுதான் இலக்கியம் பற்றிய உரையாடல் உருவாகிறது. இலக்கியம் பற்றிய ஆழமான உரையாடலே இலக்கியவாதிக்கு நாம் செய்யும் வணக்கம்

ஜெ


29-01-2020

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்