நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்
நிலம் பூத்து மலர்ந்த நாள்
இன்றைய தமிழ் நிலத்தின் சிறப்புப் பண்புகளாக வீரம், காதல், விருந்தோம்பல் போன்ற விழுமியங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விழுமியங்கள் எப்படி, யாரால் முடிவுசெய்யப்படுகின்றன? இவை எங்கு வேர்கொண்டுள்ளன? போன்ற கேள்விகளை கேட்டுப்பார்த்தோமானால், "செம்புல பெயல் நீர் போல்...", "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" போன்ற வரிகள் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டு, அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு வரும் விழுமியங்களாக இவை விளக்கமளிக்கப்படும்.
ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சிறப்புகள் அனைத்தும் அதன் ஆதி இலக்கிய ஆக்கங்களிலே வேர்கொண்டுள்ளன. அதனடிப்படையில் நம் தமிழ் மொழியின் விதைக்களஞ்சியமாக திகழ்வது 'சங்க இலக்கிய' பாடல்களாகும். பல்வேறு புலவர்கள், பலதரப்பட்ட நிலங்களிலிருந்து வெவ்வேறு காலங்களில் எழுதியவற்றுள் காலத்தால் அழியாமல் எஞ்சிநிற்கும் பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியம் எனப்படுகிறது.
இச்சங்க இலக்கிய பாடல்களில் வெளிப்படும் தொல் தமிழ் நிலத்தின் பண்புகள், தரிசனங்கள், வாழ்கைபாடுகள் ஆகியவற்றின் சாரம் கொண்டு எழுதப்பட்ட நாவலே 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'.
மலையாள நாவலாசிரியர் மனோஜ் குரூர் எழுதிய இந்நாவல் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் விருதினை வென்றுள்ளது.
சங்க இலக்கியங்களில் பாணர்களுக்கும் கூத்தர்களுக்கும் தனித்துவமான இடம் உள்ளது. இந்நாவல் இவர்களின் வாழ்க்கை பயணத்தினையே மையச்சரடாக கொண்டு புனையப்பட்டுள்ளது. வறுமையினால் உணவின்றி தவிக்கும் ஒரு பாணர்-கூத்தர் இனக்குழு தங்கள் நிலம் நீங்கி வேறு நிலம் சென்று, அந்நில அரசனிடம் தஞ்சம் அடையலாமென்று முடிவு செய்து சேருமிடமறியா பயணத்தைத் தொடங்குவதோடு நாவலும் தொடங்குகிறது. ஆயுத எழுத்தான ‘ஃ’ இன் மூன்று புள்ளிகள் போல் மூன்று பாகங்களாகப் பிரிந்துள்ளது இந்நாவல்.
இக்குழுவினை சேர்ந்த யாழிசைஞன் கொலும்பன் கதைசொல்லியாக நாவலின் முதல் பாகத்தை நகர்த்திச் செல்கிறான். கொலும்பனின் பிள்ளைகளில் ஒருவனான மயிலன் சிறுவயதிலேயே வறுமையின் கோரம் தாளாமல் இக்குழுவினை விட்டுத் தப்பியோடுகிறான். கதையின் முதல் முடிச்சு இங்குதான் விழுகிறது. வாசகர்களையும் தீவிரமாக நாவல் உள்ளிழுத்துக் கொள்கிறது. அதன் பிறகான பயணத்தில் வெவ்வேறு நில மக்களைச் சந்திப்பதும், அவர்களின் விருந்தோம்பலில் நெகிழ்வதும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இவர்கள் நிகழ்த்தும் கூத்துக்கலையும் உணர்வுப்பூர்வமாகவும் கவித்துவமாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
குழுவின் சிறந்த ஆட்டகாரனும், கொலும்பனின் மூத்த மகள் சித்திரையின் தோழனுமாகிய சந்தன் குழுவினை விட்டு பிரிந்து தன் இளமைக்கால நண்பன் மயிலனை தேடிச்செல்கிறான். பாணர்குழுவினர் ஒரு கற்குகையில் பெருங்கவி பரணரை சந்திக்கின்றன. அவரின் ஆற்றுப்படுத்தலுக்கிணங்க பெருங்கொடையாளியும் வீரமிகு அரசனுமாகிய பறம்புமலை 'வேள்பாரி'யை சந்திக்கச் செல்கின்றன. அங்கே பரணரின் உற்ற தோழரும் அரசவைக்கவிஞருமான கபிலரால் பாணர்குழு சிறப்பாக உபசரிக்கப்படுகிறது. மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைக்கிறது. கூத்து நிறைவடைந்து கொடை வழங்கும் நேரத்தில், ஒரு சதித்திட்டத்தால் அரசன் பாரி கொல்லப்படுகிறான். என்னவென்று அறியாமல் பாணர்குழு தவித்தலைய யாழிசைஞன் கொலும்பன் வெட்டுப்பட்டு இறக்கிறான். அவன் இறப்பதோடு நாவலின் முதற்பகுதி நிறைவடைகிறது.
கொலும்பனின் மகளான சித்திரை இரண்டாம் பகுதியின் கதைசொல்லியாகிறாள். கொலும்பன் இறந்த துயரோடும் வறுமை நீங்கவும் வழியின்றி செல்லும் பாணர் குழு ஒரு ஆயர் குடியில் அடைக்கலம் புகுகிறது. அங்கே கதையின் போக்கிலே மடலேறுதல், மஞ்சுவிரட்டு போன்ற சங்க இலக்கியம் அறிந்த வாசகர்கள் நுட்பமாக ரசிக்கக்கூடிய இடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இப்புது நிலத்தில் மகீரன் என்னும் படைவீரனோடு காதல் கொள்கிறாள் சித்திரை. தன் குழுவின் சம்மதத்தோடு மகீரனுடன் தகடூர் சென்று புதுவாழ்வை தொடங்குகிறாள். ஆனால் அவள் மனம் உள்ளே பல்வேறு கொந்தளிப்புகளும் சஞ்சலங்களும் அடைகிறது. தகடூரில் கவிபுனையும் 'அவ்வை'யோடு நெருக்கமாகிறாள். அவ்வையின் தோரணையும் புலமையும் அவளை வெகுவாக ஈர்க்கிறது (வாசகர்களையும் தான்!). மயிலனை தேடிச்சென்ற சந்தன் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களோடு வந்து சித்திரையை காண்கிறான். மகீரனும் மயிலனும் தங்கள் அரசியல் சதியாட்டத்தில் ஒரு பகடையாகத் தன்னை மாற்றிவிட்டத்தை அறிந்து மனம் வெதும்பி அவ்வையிடம் சரணாகதி அடைகிறாள்.
இவ்விரு பகுதிகளிலும் வெளிப்படாத பாலை நிலமும், கள்வர் கூட்டமும், போரின் குரூரமும், அதன் கொண்டாட்டமும் இப்பகுதியில் விவரிக்கப்படுகிறது. மயிலன் வாயிலாகச் சொல்லப்படும் இப்பகுதி அவன் கடந்து வந்த பாதைகளையும் அடைந்த உயரங்களையும் அதிலிருந்து வீழ்ந்த வீழ்ச்சிகளையும் இறுதியில் அவன் சந்திக்கும் 'நின்று கொல்லும் வடிவான அறத்தையும்' தொய்வில்லாமல் உத்வேகத்தோடு சித்தரிக்கிறது.
இந்த சுவாரஸ்யமான கதையோட்டத்தை இலக்கியத் தரத்திற்குக் கொண்டுசெல்வது இந்நாவலின் கவித்துவம் தான். தேவைப்படும் இடத்தில் சங்க இலக்கிய பாடல்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நவீன கவிதையின் சாயல்கள் நாவலெங்கும் நுணுக்கமாக பரவியுள்ளது. உதாரணமாக, கவிஞர் ப்ரமிளின் புகழ்பெற்ற கவிதைகளுள் ஒன்று,
"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது."
இக்கவிதை பாணர்களின் வாழ்வைக் குறிக்கும் விதமாக நாவலில் கீழ்க்கண்டவாறு வருகிறது…
“பறவைகளைப் போல காற்று வெளிகளில் பறப்பதற்கிடையில் இறகுகள் கொண்டு நாம் உயிரினை எழுதிச் செல்கிறோம்.”
இது போன்ற கவித்துவமான இடங்கள் இந்நாவலின் தரத்தைப் பலபடிகள் மேலே ஏற்றிச் செல்கின்றன.
இவ்வாறான நுட்பமான இடங்கள் மட்டுமல்லாமல் ஐவகை நிலங்கள், நிலங்களின் கருப்பொருட்கள், சங்ககால தொழில் முறைகள், உணவு வகைகள் என மொத்த சங்க இலக்கிய பாடல்களின் சாரமெனத் திரண்டு வரும் அனைத்தையும் அள்ளமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் நாவலாசிரியர். இதன் உயிர்ப்பும் வீரியமும் குன்றாவண்ணம் தமிழில் மொழி பெயர்த்துள்ள கே.வி.ஜெயஸ்ரீயும் தமிழ் இலக்கிய வாசகர்களால் கொண்டாட படவேண்டியவர்.
ஒட்டுமொத்தமாக, குறிஞ்சியின் குளிர்ச்சாரலிலிருந்து பாலையின் அனல்வெம்மை வரை, தனிமையின் ஏக்கத்திலிருந்து அறத்தின் சன்னதம் வரை என புறத்திலும் அகத்திலுமாக ஒரு முழுமையான வாழ்வனுபவத்தை எழுத்தில் வடித்த தனித்துவமான நாவல்.
மனோஜ் குரூரின் வார்த்தைகளைக் கொண்டே முடிக்க வேண்டுமானால்,
"இவ்வெழுத்துக்கள் ஓலைச்சுவடிகளிலோ, சுடுமண் சிற்பங்களிலோ, செப்பேடுகளிலோ பொறிக்கப்படாத உயிரெழுத்துக்கள்..."
----------
Comments
Post a Comment