குமரித்துறைவி : சிறு குறிப்பு
குமரித்துறைவி - ஜெயமோகன்
அபராமான வாசிப்பனுபவத்தை அளித்தது இக்கதை. தேன்குடத்தில் தூக்கி வீசப்பட்டவன் போல எத்தனை நெகிழ்வுகள் எத்தனை விம்மல்கள எத்தனை தித்திப்புகள்.
பொதுவாக நான் இந்த சடங்குகள் திருவிழாக்கள் போன்றவற்றின் மேல் பெரிய ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் இக்கதையில் வெளிப்படும் மானுட நாடகத்திற்கும் மனஎழுச்சிகளுக்கும் முன்னால் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு முழுதாக திளைக்க முடிந்தது. கலையின் நோக்கமே இதுதானோ? எத்தனை விழிகளை திறக்கிறது, எத்தனை திரைகளை விலக்குகிறது, எத்தனை சுவைகளை அளிக்கிறது.. ஒரு சிறு வாழ்விற்குள் பல பெரு வாழ்வுகளை திணித்து நம்மை விரிவடைய செய்து, விராட ரூபனாக்குகிறது.
இதை ஒட்டுமொத்தமாக தொகுக்கவே நிச்சயம் பல வாசிப்புகள் தேவைப்படும். எதை சொல்வது எதை விடுவது...
மீனாக்ஷிஅம்மன், சுந்தரேஸ்வரர், ஆதிகேசவன், சாஸ்தா, முத்தாலம்மன், பொல்லாப்பிள்ளையார் என கண் நிறைய வைக்கும் சூட்சும கதாபாத்திரங்கள் ஒருபுறம். சர்.மார்த்தாண்டன், சிறமடம் திருமேனி, வேணாடு அரசர், கங்கம்மா தேவி, நாயக்கர் தளவாய் என வியப்பில் ஆழ்த்தும் வரலாற்று பாத்திரங்கள் மறுபுறம்.
பெரிய மனிதர்களின் பெரு மனவிரிவுகள், நுண்ணிய அடுக்குகள், நுட்பமான முடிச்சுகள் என அகம் சார்ந்து வெளிப்படும் உளவியல் தளங்கள்.
வரலாற்றின் விரிவையும் அதன் சார்த்தையும் ஒரே நேரத்தில் தொட்டுனரும் பார்வைக் கோணம்... என எத்தனை எத்தனை அடுக்குகள் ஒரு கதைக்குள்....
ஓவ்வொரு விழாவும், ஒவ்வொரு சடங்கும் எத்தனை எத்தனை கண்ணீர் துளிகள் வழியே உருண்டு வந்து இப்படி சாளக்கிராமங்களாக வீற்றிருக்கின்றன என்பதை நினைத்தால் மனம் அடையும் விரிவு தாளமுடியாததாக உள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் எத்தனை ஆயிரம் பேர் இதை வாசித்திருப்போம். ஒரு பெருவேள்வி அல்லவா நாம் இயற்றியது. இயற்றும் போதே நிறைவடையச்செய்யும் கலை என்னும் பெருவேள்வி...
ஆசிரியர் மூலம் தன்னை வெளிப்படுதிக்கொள்ளும் அப்பேராற்றலின் முன் அடிபணிகிறேன்.
ஆரல் வாய் மொழி சென்று மீண்டும் ஒருமுறை அந்த பெரு விழாவில் திளைத்து வந்தோம் உடன் குமரி துறைவி ஆசிரியர் எங்களுடன் இருந்தார் .
ReplyDelete