பேசாதவர்கள் - ஜெயமோகன் - வாசிப்பு குறிப்பு
பேசாதவர்கள் - ஜெயமோகன் பேசாதவர்கள் கதையின் மையப் படிமம் அந்த மனிதச்சிறைக்கூண்டு -தூக்குபூட்டு- தான். இப்படியான கொடூர தண்டனைகள் கொடுக்க துளியும் குற்றவுணர்வற்ற சமூகங்களால் தான் இயலும். அவர்கள் எந்தவிதமான உணர்வுபூர்வ பிணைப்பும் இல்லாமல் ஒரு மேலான கடமையை ஆற்றுவதைப் போல் தான் அத்தண்டனைகளை நிறைவேற்றி இருப்பார்கள். வளர்ச்சிப் பாதையில் செல்லும் எந்த ஒரு சமூகமும் இப்படியான வரலாற்றை திரும்பி பார்க்கையில் இக்கொடூர அடக்குமுறையின் அவலம் உறைத்து, குற்றவுணர்வு ஏற்படும். ஆனால், அதற்காக 'நாங்கள் செய்தது அனைத்துமே பிழையானவை' என்று பகிரங்க மன்னிப்பு கோர முடியாது. அது -தங்களால் சமைக்கப்பட்ட- தங்கள் வரலாற்றை, அடையாளத்தை முற்றிலும் நிராகரிப்பதற்கு ஒப்பாகும். இத்தகைய இக்கட்டான சூழல் தான் மாடன்கள் முளைக்கும் விளைநிலமாகிறது. ஒடுக்கவும் வேண்டும் அதன் குற்றவுணர்விலிருந்து மீளவும் வேண்டும் என்ற மனநிலையின் விளைவாகதான் மாடன்கள் தோன்றுகிறார்கள். ஆயினும் ஒரு சமூகம் எத்தனை பலிச்சின்னங்களைதான் எழுப்ப முடியும். எனவே காலப்போக்கில் நேரடி ஒடுக்குமுறையை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்ளும். அதன் கசப்பான எச்சங்கள் இருட...