நவீன ஓவியங்கள் - சி.மோகன்
An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன். --------------------- நம் காலத்தின் பெறுமதிமிக்கக் கலைகளில் ஒன்றான நவீன ஓவியம், இன்றளவும் நம்மிடையே அதிகமும் அறியப்படாத, பிடிபடாத புதிர்ப் பிரதேசம். இதன் காரணமாக, சிந்தனைகளிலும் அழகியலிலும் நம்மை மேம்படுத்தக்கூடிய செழுமையான அனுபவங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, இன்றைய பிற கலைச் சாதனங்களோடு ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், முனைப்புடன் இயங்கும் பலரும்கூட, நவீன ஓவியம் குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கேலிப் பொருளாகப் பார்த்து நையாண்டி செய்யும் மனோபாவமும் இருக்கிறது. நம்முடைய சமகாலத்தில் சில தமிழ்த் திரைப்படங்கள், நவீன ஓவியத்தை நகைச்சுவைக் காட்சிக்கான ஒரு பொருளாகவே பயன்படுத்தியிருக்கின்றன. நவீன ஓவியம் என்பது ஒரு பேத்தல் வேலை என்றும், அதை ரசிப்பதாக பாவனை செய்பவர்கள் பம்மாத்துப் பேர்வழிகள் என்பதுமான எண்ணத்தை வெகு மக்களிடம் உருவாக்கும் கைங்கரியத்தை அவை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகின்றன. ஒரு கலை சார்ந்த படைப்பாளிகள், இன்னொரு கலை சார்ந்த படைப்பாளிகளை எவ்விதப் புரிதலும் இல்லாமல் நையாண்டி செய்வ...