சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் - வாசிப்பனுபவம்

சுந்தர ராமசாமி தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கியவர். அவரது படைப்புகள், விருதுகள், தேதிகள் ஆகியவற்றை மட்டும் பட்டியலிட்டு ஒரு அஞ்சலி கட்டுரையை எழுதாமல், ஜெயமோகன் தன் ஆசான் சு.ரா வை ரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும் ஒரு ஆக்கத்தை படைத்துள்ளார்.
உளவேகத்தில் நான்கே நாட்களில் ஓய்வின்றி எழுதப்பட்ட இப்புத்தகத்தின் முதற்பகுதி சுந்தர ராமசாமியின் பழக்கங்கள், செயல்கள், பண்புகள் ஆகியவற்றை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. ஒரு நீள் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக படைக்க இயலுமா என்று எண்ணி வியக்க வைக்கின்றது.

" அந்தரங்கமானவற்றை பற்றி பேசலாகாது, அன்பும் நெகிழ்வும் காட்டுவது பலவீனம் போன்ற எண்ணங்களை கொண்டிருந்த என் அப்பாவின் காலகட்டத்தை சேர்ந்தவர் சுந்தர ராமசாமி."

எம்.எஸ். பற்றி சுந்தர ராமசாமி "அவர் எனக்கு முன்னாடியே செத்திர கூடாதுன்னு அப்பப்ப நெனெப்பேன். " என்று கூறுவது அவர்களின் நட்பின் ஆழத்தை காட்டுகிறது.

ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகிற்கு நுழைவதற்கு பெரும் தூண்டுதலாக இருந்துள்ளார் சு.ரா.

"எழுதும்போது அனைத்து துன்பங்களையும், அவமானங்களையும், இழப்புகளையும், இனிமையாக மாறிக்கொள்ளலாம். நிஜ வாழ்வின் துன்பங்கள் ஒரு சாரமற்றவை , அத்தத் தளிப்பே துக்கமாகிறது, ஏன், ஏன் என்று மனசு தவிக்கிறது. எழுத்துல அதலாம் ஏன்னு நமக்கு தெரியும்."

நூலின் இரண்டாம் பகுதி கச்சிதமாக தன்னை வகுத்துக்கொண்டு வெவ்வேறு தளங்களில் சுந்தர ராமசாமியை விளக்குகிறது. அவரது இறுதி சடங்கு நாள் மிக நெகிழ்வுடன் எழுதப்பட்டுள்ளது.
தன் ஆசானை உரசி உரசியே ஜெயமோகன் தன்னையும் சுரா வையும் கண்டடைந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தளத்தில், காலத்தில், கூறுமுறையில் இயங்குபவர்கள் ஆயினும் ஜெயமோகன் ராமசாமியின் தொடர்ச்சியே. இதை புரிந்துகொள்ள  Einstein- Niels Bohr , Socrates- Plato போன்ற பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன.
காந்தி, நேரு, குரு நித்யா, நாராயண குரு, எம்.எஸ் , பிரமிள், அசோகமித்திரன், ஜெயகாந்தன், நகுலன் போன்ற பல ஆளுமைகளோடு சுரா வின் உறவை விளக்குகிறார் ஜெயமோகன்.
நாம் படித்துக்கொண்டிருக்கும் போதே ஜெ-சு.ரா இடையே உரசல் விரிசலாகி விரிந்துக்கொண்டே போகிறது. படிக்கும் நமக்கு ஒரு பதைப்பதைப்பு வருகிறது.
இந்நூலில் சுராவின் உரையாடல்கள் சிறந்த மேற்கோள்களாக இருக்கும். அவை ஒரு நிகழ்வையோ, ஆளுமையையோ முழுவதுமாக விளக்கும் செறிவோடு அமைந்துள்ளது, சுராவின் அவதனிப்பையும் சிந்தனை நுட்பத்தையும் விளக்கும்.
சுரா சொல்ல தட்டச்சு வேறுஒருவர் செய்வார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவரது மேலைத்துவ மோகம், குளியலறை பாடல், வாசிக்கும் முறை, எழுத்து முறை என அனைத்தையும் ஜெயமோகன் விளக்கியுள்ளார். இதில் ஜெயமோகனின் குரல் அதிகமாக ஒலிப்பது நெருடும் போதே கா.நா.சு - சு.ரா பகுதி வந்து அக்குழப்பத்தை தெளிவாக்கியது. சுந்தர ராமசாமியின் ஆளுமையை விளங்கிக்கொள்ள இந்நூல் ஒரு பெரிய துணையாக அமையும்.

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்