December 24, 2019

சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் - வாசிப்பனுபவம்

சுந்தர ராமசாமி தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கியவர். அவரது படைப்புகள், விருதுகள், தேதிகள் ஆகியவற்றை மட்டும் பட்டியலிட்டு ஒரு அஞ்சலி கட்டுரையை எழுதாமல், ஜெயமோகன் தன் ஆசான் சு.ரா வை ரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும் ஒரு ஆக்கத்தை படைத்துள்ளார்.
உளவேகத்தில் நான்கே நாட்களில் ஓய்வின்றி எழுதப்பட்ட இப்புத்தகத்தின் முதற்பகுதி சுந்தர ராமசாமியின் பழக்கங்கள், செயல்கள், பண்புகள் ஆகியவற்றை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. ஒரு நீள் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக படைக்க இயலுமா என்று எண்ணி வியக்க வைக்கின்றது.

" அந்தரங்கமானவற்றை பற்றி பேசலாகாது, அன்பும் நெகிழ்வும் காட்டுவது பலவீனம் போன்ற எண்ணங்களை கொண்டிருந்த என் அப்பாவின் காலகட்டத்தை சேர்ந்தவர் சுந்தர ராமசாமி."

எம்.எஸ். பற்றி சுந்தர ராமசாமி "அவர் எனக்கு முன்னாடியே செத்திர கூடாதுன்னு அப்பப்ப நெனெப்பேன். " என்று கூறுவது அவர்களின் நட்பின் ஆழத்தை காட்டுகிறது.

ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகிற்கு நுழைவதற்கு பெரும் தூண்டுதலாக இருந்துள்ளார் சு.ரா.

"எழுதும்போது அனைத்து துன்பங்களையும், அவமானங்களையும், இழப்புகளையும், இனிமையாக மாறிக்கொள்ளலாம். நிஜ வாழ்வின் துன்பங்கள் ஒரு சாரமற்றவை , அத்தத் தளிப்பே துக்கமாகிறது, ஏன், ஏன் என்று மனசு தவிக்கிறது. எழுத்துல அதலாம் ஏன்னு நமக்கு தெரியும்."

நூலின் இரண்டாம் பகுதி கச்சிதமாக தன்னை வகுத்துக்கொண்டு வெவ்வேறு தளங்களில் சுந்தர ராமசாமியை விளக்குகிறது. அவரது இறுதி சடங்கு நாள் மிக நெகிழ்வுடன் எழுதப்பட்டுள்ளது.
தன் ஆசானை உரசி உரசியே ஜெயமோகன் தன்னையும் சுரா வையும் கண்டடைந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தளத்தில், காலத்தில், கூறுமுறையில் இயங்குபவர்கள் ஆயினும் ஜெயமோகன் ராமசாமியின் தொடர்ச்சியே. இதை புரிந்துகொள்ள  Einstein- Niels Bohr , Socrates- Plato போன்ற பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன.
காந்தி, நேரு, குரு நித்யா, நாராயண குரு, எம்.எஸ் , பிரமிள், அசோகமித்திரன், ஜெயகாந்தன், நகுலன் போன்ற பல ஆளுமைகளோடு சுரா வின் உறவை விளக்குகிறார் ஜெயமோகன்.
நாம் படித்துக்கொண்டிருக்கும் போதே ஜெ-சு.ரா இடையே உரசல் விரிசலாகி விரிந்துக்கொண்டே போகிறது. படிக்கும் நமக்கு ஒரு பதைப்பதைப்பு வருகிறது.
இந்நூலில் சுராவின் உரையாடல்கள் சிறந்த மேற்கோள்களாக இருக்கும். அவை ஒரு நிகழ்வையோ, ஆளுமையையோ முழுவதுமாக விளக்கும் செறிவோடு அமைந்துள்ளது, சுராவின் அவதனிப்பையும் சிந்தனை நுட்பத்தையும் விளக்கும்.
சுரா சொல்ல தட்டச்சு வேறுஒருவர் செய்வார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவரது மேலைத்துவ மோகம், குளியலறை பாடல், வாசிக்கும் முறை, எழுத்து முறை என அனைத்தையும் ஜெயமோகன் விளக்கியுள்ளார். இதில் ஜெயமோகனின் குரல் அதிகமாக ஒலிப்பது நெருடும் போதே கா.நா.சு - சு.ரா பகுதி வந்து அக்குழப்பத்தை தெளிவாக்கியது. சுந்தர ராமசாமியின் ஆளுமையை விளங்கிக்கொள்ள இந்நூல் ஒரு பெரிய துணையாக அமையும்.

December 22, 2019

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போல் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். படித்து முடித்து மூடி வைக்கும்போது
"சரி okay. இப்ப இந்த நாவல் என்ன சொல்ல வருது? சரளமான கவித்துவமான மொழி இருக்கு ஆனா கதை என்ன ?"
 என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் புத்தகத்தை மூடி ராக்கில் வைத்துவிட்டேன்.
Image result for jj sila kuripugal

இந்நூலின் பின்னுரையில் சுகுமாரன் கூறுவதைப் போல் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட தமிழின் நவீன நாவல் இதுவே. எக்கச்சக்கமான விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் இணையத்தில் குவிந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஜெயமோகன் இதனை பட்டியலிட்டுள்ளார். மேலும் அவரது "சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்" என்னும் நூலில் ஒரு பத்து பக்கத்திற்கு ஒரு முறையாவது இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும் , இதன் மதிப்பையும் பற்றி கூறியுள்ளார். நமக்கு மட்டும் ஏன் இது சாதாரணமாக தெரிகின்றது என்று சலிப்புடன் இதை ஒதுக்கி வைத்துவிட்டேன்.
Image result for sundara ramaswamy ninaivin nathiyil
Image result for sundara ramaswamy
Sundara Ramasamy

பின்னர் ஒருநாள் யுவன் சந்திரசேகர் எழுதிய 'கானல் நதி'யில் வரும் கதாநாயகனின் (தனஞ்சய முகர்ஜி) டயரி குறிப்புகளை படித்துக்கொண்டிருந்த போது ஜேஜே யின் நியாபகம் வந்தது. சரியென்று கானல் நதி முடித்த கையோடு ஜேஜே : சில குறிப்புகளை (மீண்டும்) வாசிக்க தொடங்கினேன்.
Image result for kaanal nadhi yuvan

முன்பு போலவே இப்போதும் என்னை வசீகரித்தது இதன் மொழியே. "மேகங்களை கலைப்பவன் ஜேஜே"
 என்ற வரியில் நான் நின்று விட்டேன். இந்நாவலை இதன் மொழிக்காகவே வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதானமாக வாசித்தேன். மிக மிக நேர்த்தியுடனும் 'சவரக்கத்தியின் கூர்மையுடனும்' சுந்தர ராமசாமியால் இந்நாவல் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர்களுக்கு ஜேஜே நிச்சயமாக ஆதர்ச நாயகனாகி விடுவான். மேலும் இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.

ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். முற்போக்கு எழுத்து, பெண் எழுத்து, நவீன எழுத்து, வணிக எழுத்து போன்ற எழுதுமுறைகள், நிறுவன அமைப்பு, அரசியல் அமைப்பு, இலக்கிய அமைப்பு, சமூக அமைப்பு போன்ற அமைப்புகள், பெற்றோர், மனைவி, நண்பன், ஆசிரியர் போன்ற உறவுகள் என அனைத்தையும் ஜேஜே வின் கண்கள் மூலம் எள்ளலுடனும் விமர்சனதுடனும் காட்சிகளாக விரித்தெடுக்கிறார் சுந்தர ராமசாமி.

இந்நாவலின் முதற்பகுதி முழுக்க பாலு என்ற தமிழ் எழுத்தாளர் பேசிக்கொண்டே இருக்கிறான்.
"யார் ஜேஜே? அவன எப்படி தெரியும்? அவன் என்னாலா செஞ்சிருக்கான்? " என்ற கேள்விகளுக்கு ஒரு நாள் முழுக்க சகபயணி போல் ஜேஜேவை பற்றி பேசிக்கொண்டும், அவன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொண்டும் வருபவனாகவே என்னால் பாலுவை பார்க்க முடிகிறது.
ஜேஜேவின் டைரி குறிப்புகளாக விரியும் இதன் இரண்டாம் பகுதி மேலும் செறிவுடனும் கவித்துவதுடனும் பின்னப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாற்பது ஆண்டுகளை (1981) கடக்க போகும் இந்நாவல் இன்றும் தமிழ் வாசகர்களால் பெரிதும் கொண்டாட படுகிறது. சராசரி மொழி, சராசரி கூறுமுறை, சராசரி கதாநாயகன், சராசரி பார்வை என அன்றாடம் புழங்கிவரும் அனைத்தையும் மீறி இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் இந்நாவல் என் வாசிப்பு வரிசையில் மிக முக்கிய நாவல்.

""எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்தப் படட்டும். நம்பிக்கைவாதி என்றோ, அவநம்பிக்கைவாதி என்றோ, முற்போக்குவாதி என்றோ, பிற்போக்குவாதி என்றோ, சமூக அழிவிற்கு காரணமானவன் என்றோ எனக்கு பெயர் சூட்டட்டும். அனைத்தும் ஒன்றாகப்படும் இடத்திற்கு நான் போய்ச் சேரவேண்டும். ஒரு வித்தியாசம் முக்கியமானது. அது மட்டுமே எனக்கு முக்கியமானது. நான் உண்மை பேசுகிறேனா அல்லது பொய் பேசுகிறேனா என்பது.""

                                                                                            ஜோசப் ஜேம்ஸ் (ஜேஜே)