பின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்
பள்ளிப்பருவத்தில் 'புரட்சி' என்ற சொல் அறிமுகமானவுடன் ஏற்பட்ட கிளர்ச்சியால் தான் நான் சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, லெனின், மாவோ போன்றவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவர்களே என் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். குறிப்பாக லெனின், அவரைப்பற்றிய ஒரு சிறு நூலை 'Prodigy' நிறுவனம் வெளியிட்டது. ஒரு மாணவனாக என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த புத்தகம். அவரை போலவே ஒரு 'படித்த' புரட்சியாளர் ஆகவேண்டுமென்று விரும்பினேன்.
தொடர்ச்சியாக இடதுசாரி நூல்களை வாசித்து வந்ததால் 'ரஷ்யா' என்னும் 'புரட்சிப்பொண்ணுலகம்' பூமியில் உள்ளது என்று அறிந்தேன். என் மனமும் அவ்வாறே பதிய வைத்துக்கொண்டது.
பன்னிரண்டாம் வகுப்பில் வாசிப்பு முற்றிலுமாக தடைப்பட்டது. ஆயினும் ரஷ்யா பற்றிய பிம்பம் என்னுள் மாறவில்லை.
பின்னர் கல்லூரி சேர்ந்தவுடன் மீண்டும் வாசிப்பை தொடங்கினேன். அப்போது தான் ஜெயமோகனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எழுத்துக்கள் ஒரு நீர்சுழல் போல் என்னை உள்ளிழுத்து கொண்டது. அவரது பெரும் நாவலான விஷ்ணுபுரத்தை வாசித்த அனுபவம் இன்னும் என்னுள் ஒரு கனவு போல் நிறைந்துள்ளது.
அதனை தொடர்ந்து நான் வாசித்த புத்தகமே 'பின் தொடரும் நிழலின் குரல்'. இது ஒரு அரசியல் நாவல். ஆனால், மன கிளர்ச்சியையோ துவேஷத்தையோ மட்டும் வாசகனுக்கு அளிக்காமல் ஒரு முழு குருக்குவெட்டு தோற்றத்தை நமக்கு தருகிறது.
அருணாசலம் என்பவன் ஒர் இடதுசாரி தோழர், தொழிற்சங்க உபதலைவர், அறிவுஜீவி. (இடதுகாலை எடுத்து வைக்க தயங்கும் ஒருவன்!).
அவனது ஆசான் K.K.மாதவநாயர்(K.K.M) - ஒரு போராளி, தொழிற்சங்க தலைவர், தீவிர ஸ்டாலினிஸ்ட், தியாகத்தால் கட்சியை வளர்த்து ஆளாக்கியவர்.(சைக்கிள் ஓட்ட தெரியாதவர், நாடகங்கள் விரும்பி பார்ப்பவர்!).
தொடக்கத்தில் ஒரு லட்சிய இயக்கமாக இருந்த கட்சி தொண்ணூறுகளில் தொழிலாளர்களுக்கு வக்கீல் சேவை செய்ய்யும் நிறுவனமாக மாறுகிறது. இதை சகிக்கக முடியாமல் K.K.M தனிமையில் ஆழ்கிறார். அவரை சுற்றி பல மாற்றங்கள் ஏற்படுகி்றது. இறுதியாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
அருணாசலம் அவர் இடத்தை நிறப்புகிறான். அவனது இடத்தை நாராயணன் என்னும் நவீன ஜனநாயக போராளி நிறப்புகிறான்.
மேலும் இளம் அறிவுஜீவி கதிர் அவர்கள் பக்கம் நிற்கிறான்.
அப்பொழுது அருணாசலதிற்கு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்று கிடைக்கிறது. அவர் கட்சிக்கு துரோகம் செய்ததால் வெளியேற்றப்பட்டவர் என்று அவன் செவிவழி செய்திகளால் அறிகிறான். ஆனால் அவரை பற்றிய சிறு தகவல் கூட கட்சி ஆவணங்களில் இல்லை. இது அருணாசலத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன், எதற்கு போன்ற கேள்விகள் அவன் மூளையை மொய்த்தன.
S.M. ராமசாமி (சுந்தர ராமசாமி) ஒரு நவீன எழுத்தாளர். அவர் வீரபத்ரபிள்ளை இறுதிக்காலத்தில் எழுதிய கடிதங்களை தருவித்து அருணாசலத்திற்கு அனுப்புகிறார்.
ரஷ்யாவில் ஸ்டாலின் அரசு நிகழ்த்தும் கொடுமைகளை எதிர்த்த தலைவர் 'புகாரின்'. அவருக்கு அரசு மரண தண்டனை வழங்கியது. இதை வீரபத்ரபிள்ளை அறிகிறார்.
புகாரின், ஸ்டாலின், ரஷ்யாவின் நிலவரம் பற்றிய உண்மைகளை எழுதுவேன் என்று பிடிவாதமாக இருந்த வீரபத்ரபிள்ளை மீது அவதூறு பரப்பி, அவரை கட்சி வெளியேற்றியது. பின்னர் அவரை பற்றிய தடையம் இல்லாமல் ஆக்கியது.
புகாரினின் ஆவி பிடித்து வீரபத்ரபிள்ளை பித்தாகிறார். அனைத்து கீழ்மைகளும் அடைந்து மரணிக்கிறார்.
இதே சம்பவங்கள் அருணாசலத்திற்கு அவனையரியாமல் நிகழ்கிறது. அவன் வீரபத்ரபிள்ளையை பற்றி கட்சி மலரில் எழுத முயல்கிறான். அவனை கட்சி அரசியல் ஆட்டத்தில் சிக்கவைத்து வெளியேற்றுகிறது. மனம் பிறழ்ந்து பித்தாகிய அவனை அவன் மனைவி நாகம்மை மீட்டெடுக்கிறாள்.
இவ்வனைத்தையும் கேட்டறிந்த ராமசாமியின் மாணவர் எழுத்தாளர் ஜெயமோகன் இதனை ஒரு நாவலாக எழுதுகிறார்
அதற்கு 'பின் தொடரும் நிழலின் குரல்' என்று தான் பெயர் வைக்க வேண்டுமென்று அருணாசலம் கூறுகிறான்.
'பின் தொடரும் நிழலின் குரல்' நாவல் வெளியாகி இருபது வருடங்கள் ஆகின்றது. ஆனால், இன்று வாசிப்பவர்களுக்கு கூட அதன் மொழி இருபது ஆண்டுகள் பழமையானது என்று தோன்றாது. ஏனெனில் அது அறத்தின் குரல், வரலாறு விழுங்கிய ஆன்மாக்களின் விசும்பல். வரலாறு வெற்றி கோஷங்களினால் மட்டும் நிறைந்தவை அல்ல என்பதனை நவீனத்துவம் மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தபடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது.
புகாரின், வீரபத்ர பிள்ளை, அருணாசலம் அனைவரும் அறத்தின் சரடினை கெட்டியாக பிடித்துள்ளனர். அல்லது அறம் (பேய்) அவர்களை பிடித்து உலுக்குகிறது. அவர்கள் புனிதர்கள் அல்ல, ஆயினும் அந்நிலைக்கு அருகே செல்ல முயன்ற மனம் பிறழ்ந்தவர்கள்.
ஜெயமோகனின் நாவல்கள் விரையும் விமானப்பயணமோ, குதிரைஓட்டமோ, ஓட்டப்பந்தையமோ அல்ல. அவை 'டெக்டானிக் ப்லேட்' நகர்வுகள், மிக மெல்லமாக, மிக ஆழமாக நமக்குள் நகரும் பின்னர் சுனாமியும், நிலநடுக்கங்களும் ஏற்படுத்தி நம்மை நிலைக்குலைத்து விடும்.
ஜெயமோகன் இது விஷ்ணுபுரத்திற்கு இணையான ஒரு செவ்வியல் ஆக்கம் என்று கூறுகிறார். இரண்டும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் அது உண்மையே.
மார்க்சியம், ஸ்டாலினியம், காந்தியம் போன்ற தத்துவங்களை உரையாடல்கள் மூலம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது. மேலும் இதில் பல நுட்பமான இடங்களும் உள்ளது என்று நினைக்கிறேன்.
உதாரணமாக அருணாசலம், வீரபத்ரபிள்ளை இருவரும் சிவனின் பெயர் கொண்டவர்கள், அறிவுஜீவிகள்,
வேறு யாரோ ஒருவருக்காக அறமென்னும் விஷத்தை அருந்தி நீலம் பாரித்தவர்கள். விஷம் உள்இறங்கி மடியாமல் சிவனை காக்கும் நாகத்தை போல் நாகம்மை அருணாசலத்தை காக்கிறாள். ஆனால் வீரபத்ரபிள்ளைக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.
புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம் என்று தொடரும் இவ்வரிசையில் அடுத்து யார் என்று யோசிக்கும் பொழுது அருணாசலம் கதிருக்கு கடிதம் எழுதுகிறான். ஆம், வலையின் அடுத்த முடிச்சு அவன்தான்.
பாதி புத்தகம் வரை எதார்த்தமாக செல்லும் நாவல் அடுத்த பாதியில் ஒரு கனவு பாய்ச்சலினை எடுக்கிறது. கடிதம், சிறுகதை, நாடகம், குறிப்புகள், என்று பலவாக விரிந்து நாவல் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.
அருணாசலத்திற்கு மெல்ல மெல்ல மனம் பிறழ்ந்து அவன் வீரபத்ரபிள்ளையாகவே மாறும் இடம் அபாரம். K.K.Mன் உரை, கதிர்-அருணாசலம் உரையாடல், நாராயணனின் மாற்றம், அன்னா இடம்பெறும் நாடகங்கள், டால்ஸ்டாய்-தஸ்தாவெஸ்கி நாடகம், என பல சிறந்த இடங்கள் உள்ளன அவற்றை மட்டும் தனியாகவே பலமுறை வாசித்து உள்ளேன்.
இது பெண்களை அவமதிக்கும் நாவல் என்று ஒரு விமர்சன கட்டுரையில் படித்தேன். ஆனால் ஜெயமோகன் பெண்களையே அறத்தின் காவலர்களாகவும், அன்பின் விளைநிலமாகவும், ஆற்றலின் ஊற்றாகவும் இந்நாவலில் உருவகப்படுத்தியுள்ளார்.(நான் மிகைப்படுதவில்லை!)
வரலாறு என்னும் நதி அதனுள்ளே மூழிகியவர்களின் குருதியால் நிறைந்தது, அவர்களின் உத்வேகத்தால் ஓடுகிறது, அவர்களின் அறத்தால் அது தெளிந்துள்ளது.
மிக அருமை உங்கள் வாசிப்பு தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள். அருணாச்சலம் நாகம்மை உறவின் மீதான புதிய பார்வை அருமை
ReplyDeleteexcellent.Keep it up.
ReplyDeleteசில அனுபவப் பகிர்தல்களே நாவல் பற்றிய ஆர்வத்தை காட்டுகின்றன. அருமையான பகிர்தல்.
ReplyDeleteகதிர் அந்த முடிச்சில் சிக்கப்போவதேயில்லை. அறத்தை மருந்துகளை தயாரிக்க உதவும் விஷம் மட்டுமே என்பதை உணர்ந்த எதார்த்தவாதி. வீரபத்ரரின் மனைவி போல.
நன்றி.
Deleteஒரு நாவல் பலருக்கு பல தீர்ப்புகளை அளிக்கிறது.
ஜெ-யின் பக்கம் மூலமாக உங்கள் பக்கத்திற்கு வந்தேன். புதிய வலைப்பக்கத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபின் தொடரும் நிழலின் குரல்பற்றி நன்றாக எழுதியிருப்பதாகத் தெரிகிறது .அதை நான் வாசிக்கவில்லை. அவரது ‘அறம்’ வாசித்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
நேரமிருக்கையில் என் பக்கத்திற்கு (ஏகாந்தன் Aekaanthan) வாருங்கள். கட்டுரைகள், சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில சிறுகதைகள் சொல்வனத்தில்.
சமீபமாக, உலகக்கோப்பை கிரிக்கெட் பற்றி வரிந்துகட்டி எழுதியிருக்கிறேன். உங்களுக்கு இஷ்டமில்லை எனில் வேறு கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம்.
நன்றி.
Deleteநிச்சயமாக பார்க்கிறேன்.
அறம் கதைகள் என்னையும் பாதித்தவையே..